அனைத்தும் சாத்தியம் 06.06.2022 அன்று சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறை தமிழ்நாட்டில் உருவானது. மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருவதோடு, மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக “அனைத்தும் சாத்தியம்” என்ற பெயரில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த அருங்காட்சியகம் வழிவகை செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய “மாதிரி இல்லம்” வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகமானது பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமூகத்துடனான தொடர்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற இந்த அருங்காட்சியகம் உதவுகிறது. உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் (Choice Based System of Providing Assistive Devices) துவக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9