இ-ஷ்ரம் இணையதளம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய அளவிலான தரவை அளிப்பதற்கான இ-ஷ்ரம் (e-Shram) இணையதளத்தை ஆகஸ்ட் 26, 2021 அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை இ-ஷ்ரம் https://eshram.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இ-ஷ்ரம் பயனர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவரங்கள், தொடர்பு விவரங்கள், முகவரி தகவல், தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இ-ஷ்ரம் பயன்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும் உதவிகரமாக இருக்கும். இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சமூகநலத்திட்டப் பயன்களை அமைச்சகம் அளிக்கவுள்ளது. வர்த்தகர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்ட பயன்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பதிவு செய்யும் முறை பொதுச்சேவை மையம், மாநில சேவை மையம் மூலமாகவோ அல்லது சுயமாகவோ அமைப்புச்சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்ய அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அவர்களுக்கு வழிகாட்ட தேசிய அளவில் 14434 என்ற இலவச தொலைப்பேசி உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்பவர்களுக்கு 12 இலக்கு எண் [Universal Account Number (UAN)] வழங்கப்படும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்