தொட்டில் குழந்தை திட்டம்

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர். இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.

பெண் சிசுகொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் 1992இல் துவக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் தமிழகத்தில் பல பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தது. பிறந்தவுடனே பெற்றோர்களால் கைவிடப்படும் பெண் சிசுக்கள் இந்த திட்டம் மூலம் அரசாங்கத்தால் வளர்க்கப்படுகிறார்கள். 1992 முதல் 2014 வரை, இந்த திட்டத்தின் கீழ் 4000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்கள்

சேலம்

மதுரை

திண்டுக்கல்

தேனி

தருமபுரி

குழந்தை இல்லாத பெற்றோர்கள் பலரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் தொட்டில் குழந்தைகளைத் தத்தெடுக்கின்றனர்.

திட்டங்களால் பெண் சிசுக்களின் உயிர்களைக் காக்கும் நிலை மாறி, சமூகத்தில் மாற்றம் வர வேண்டியது அவசியம். அத்துடன் பெண் குழந்தைகளுக்கு கல்வியும் சம வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு