சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

பயன்களை பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

குறைந்தபட்சம் மூன்று மாத காலம் முடிவுற்ற சுய உதவி குழுக்கள்

தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

திட்டத்தின் செயல்பாடு

வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை மேற்கொள்ள வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு சுய உதவி குழுக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்படும்

சுய உதவி குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் நிலைத்த தன்மையை அடைய இரண்டாவது மறுகடன் மற்றும் தொடர் மறுகடன் இணைப்பு வங்கிகள் மூலமாக வழங்கப்படும்.

வழங்கப்படும் கடன் தொகை

வங்கிகள் மூலம் முதல் கடன் இணைப்பாக வழங்கப்பட்ட ரூ. 50000 த்திற்கு பின்னர் தொடர் கடன் இணைப்புகளாக ரூ. 1 இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை தேவைக்கேற்ப வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

சுய உதவி குழுக்களுக்கான வட்டி மானியம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 3 இலட்சம் வரை வங்கிக் கடன் 7 விழுக்காடு வட்டியில் கிடைக்கும் வகையில், வங்கிகளால் 7 விழுக்காட்டிற்கு மேல் விதிக்கப்படும் வட்டித் தொகை குழுவிற்கு மீள வழங்கப்படும். இது இரு வகையாக செயல்படுத்தப்படுகிறது

தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 150 மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் வங்கிகள் மூலம் அதிக பட்சம் ரூபாய் 3 இலட்சம் வரை 7 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் கடன் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் சுய உதவி குழுக்களுக்கு, 3 விழுக்காடு கூடுதல் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுய உதவி குழுக்கள் 4 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன் பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வழிமுறையின் கீழ், தமிழ்நாட்டில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. (வகை-1)

இதர 27 மாவட்டங்களில் (வகை-2) வங்கிகளிடமிருந்து பெறும் கடன் தொகை 3 இலட்சம் ரூபாய் வரை விதிக்கப்படும் வட்டி விகிதத்தில், 7 விழுக்காட்டிற்கு மேற்பட்ட வட்டித்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இம்மாவட்டங்களில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நெறிமுறையான 75 விழுக்காடு உறுப்பினர்கள் மக்கள் நிலை ஆய்வின் மூலம் அடையாளம் கண்டறியப்பட்ட ஏழை மகளிராக இருக்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்ட சுய உதவி குழுக்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

ஒரு கிராமம் ஓரு உற்பத்தி பொருள்

“ஒரு கிராமம் - ஒரு உற்பத்தி பொருள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபட்டுள்ள குழுக்களை கண்டறிந்து அவைகளை ஊக்குவித்து ஒரு கிராம அளவில் அல்லது சில கிராமங்களை இணைத்து விவசாயம் சாராத தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு தொழில் தொகுப்புகள் உருவாக்கப்படும். அவற்றிற்கு அனைத்து வகையான நிதி வசதி ஏற்படுத்தித் தந்து, உற்பத்தியை பெருக்கி, சந்தை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான தனி நபர் அடையாள அட்டை

அரசு துறைகள், வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களை அணுகும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையை நல்கும். சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு தனி நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உதவிகள் வழங்குவதை தவிர்க்கவும், ஒருவரே இரட்டிப்பு உறுப்பினராக ஆவதை தடுக்கவும் ஏதுவாக ஒவ்வொரு தனி உறுப்பினரையும் அடையாளம் கண்டு கொள்ள சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தனி நபர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இது வரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் 60 வட்டாரங்களில் 4.67 இலட்சம் மகளிருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மீதமுள்ள வட்டாரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

விருதுகள்

சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருதுகள்

சுய உதவி குழு இயக்கத்தினை வலுப்படுத்திடும் பொருட்டு, முக்கிய திட்டப் பங்காளர்களாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து உறுப்பினர்களையும் எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்கும் 30 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 50000 பரிசுடன் கூடிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக அநீதிகளுக்கு எதிராக அசாதாரணமான துணிவுடன் போராடும், சுய உதவி குழுக்களை கௌரவிக்கும் வகையில் 5 சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இவ்விருதுகள் மூலம் சுய உதவி குழுக்கள் சமூக நீதிக் காவலர்களாக, சமூக அநீதிகளை எதிர்த்து போராட எழுச்சி பெறுவர்.

சிறப்பாக செயல்படும் வங்கியாளருக்கான விருது

சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதில் சிறப்பாக செயல்படும் வங்கியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வங்கி / வங்கி கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறந்த சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புளுக்கான விருதுகள்

சிறப்பாக செயல்படும் 10 சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த மூன்று சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ. 25000 வீதம் விருதுகள் வழங்கப்படுகிறது,

சிறப்பாக செயல்படும் 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ. 1 லட்சம் விருதுகள் வழங்கப்படுகிறது.

கலாச்சார போட்டிகள்

சுய உதவி குழு மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை, திறன் மற்றும் கூட்டு முயற்சியை வெளிக்கொணரும் நோக்கத்தில் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பண்பாட்டு கலாச்சார போட்டிகள் நடத்தப்படுகின்றன. இக்கலாச்சார போட்டிகள் சுய உதவி குழு மகளிரிடையே பெற்றுள்ள ஆதரவையும் வரவேற்பையும் மற்றும் அதன் பயன்களையும் கருத்தில் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 2014-15 ஆம் ஆண்டில் இத்தகைய கலாச்சார போட்டிகள் சுய உதவி குழு உறுப்பினர்களிடையே தொடர்ந்து நடத்தப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்