ஆதிதிராவிட நல இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 24x7 கட்டுப்பாட்டு அறை சமூகநீதி விடுதிகளில் குறைதீர்வை வலுப்படுத்தி, குறைகளை நேரடியாகவும் உடனடியாகவும் நிவர்த்தி செய்வதற்காக ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் இன்று (23.09.2026) ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் திறந்து வைத்தார். சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்கள் உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளைப் பதிவு செய்து உடனடி தீர்வு பெற இது உதவும். கட்டுப்பாட்டு அறை மூலம் மாணாக்கர்கள் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (+91 73388 01456), எக்ஸ் (முன்பு ட்விட்டர்) - (@ADWDtamilnadu) வழியாகத் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யலாம். பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாகத் தொடர்புடைய அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணாக்கர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்து மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்கள் மாணாக்கர்களுடன் நேரடியாக உரையாடி, அடிப்படை வசதிகள் மற்றும் நலன் குறித்துக் கேட்டறிந்தார். பெறப்பட்ட மற்றும் நிவர்த்தி செய்யப்பட்ட குறைகள் குறித்து இயக்குநர் அவர்கள் தினமும் ஆய்வு செய்வார். வாரந்தோறும் அறிக்கை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் மற்றும் சமூக நீதித்துறை செயலாளர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண் 723 (23.09.2026)