கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் கூட்டமைப்பும் அ. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிற்கு இடையேயான தொடர்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்பது இலக்கு மக்களின் வறுமையை குறைப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் இலக்கு மக்களை கொண்டு சுய சார்புடன் செயல்படும் சமூக அமைப்பு ஆகும். இவ்வமைப்பு சுய உதவி குழு சம்பந்தப்பட்ட கீழ்கண்ட பணிகளை செய்கின்றது. விடுபட்ட இலக்கு மக்களை குழுக்களாக அமைத்தல். சுய உதவி குழுக்களை வலுப்படுத்த தேவையான பயிற்சிகள் அளித்தல். குழுக்களுக்கு போதிய நிதி இணைப்பு செய்தல். குழுக்களை தொடர்ந்து கண்காணித்து அதன் வளர்ச்சிக்கு உதவுதல். குழுக்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பாக உருவாக்குதல். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஊராட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயல்படும் மக்கள் அமைப்பே கூட்டமைப்பு ஆகும். இவ்வமைப்பு கீழ்கண்ட நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன சுய உதவி குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் குழுக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுதல் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவுதல் சமூக மேம்பாடு அடைய செய்தல் ஆ. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை உருவாக்க தேவைப்படும் தகுதிகள் குறைந்தபட்சம் 75% இலக்கு மக்கள் தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற குழுக்களில் உறுப்பினர்களாக இருத்தல். ஊராட்சியில் குறைந்தது 10 தகுதியான குழுக்கள் இருப்பின் கூட்டமைப்பினை மறுசீரமைப்பு செய்யலாம். குறைந்தது 10 குழுக்கள் இல்லாத பட்சத்தில் வறுமை ஒழிப்பு சங்கத்தின் தொழில் (ம) கண்காணிப்பு குழுவினை மறு சீரமைத்து வாழ்வாதார துணை குழுவினை அமைத்தல் வேண்டும் (அனைத்து குழுக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில்) இ. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மறுசீரமைப்பதற்கு உண்டான படிநிலைகள் 1. அனைத்து சுய உதவி குழுக்களுக்கும் கூட்டமைப்பின் அவசியம் மற்றும் மறுசீரமைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 2. சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்கள் கூட்டங்களில் கூட்டமைப்பு மறுசீரமைப்பு பற்றி விவாதித்தல். 3. குடியிருப்பு அளவிலான கூட்டங்கள் நடத்தி குடியிருப்பு அமைப்பு உருவாக்கி நிர்வாகிகளை தேர்வு செய்தல். 4. குடியிருப்பு அமைப்புகளிலிருந்து செயற்குழுவுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தல். 5. பொதுக்குழு கூட்டம் நடத்தி செயற்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் பெறுதல். நிர்வாகிகள் தேர்வு செய்தல். துணை குழுக்கள் அமைத்தல். 6. பொதுக்குழுவின் இறுதி ஒப்புதலுக்கு முன் கூட்டமைப்பு அரசாணையின் விதிப்படி அமைக்கப்பட்டு இருப்பதை திட்ட அலுவலர்கள் (அணித் தலைவர் / உதவி திட்ட மேலாளர் ) சரி பார்க்க வேண்டும். குறிப்பு மறு சீரமைப்பு குறித்த அனைத்து செலவினங்களையும் கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன் வளர்ப்பு நிதியிலிருந்து செலவு செய்து கொள்ளலாம். ஈ. கூட்டமைப்பை வலுப்படுத்துதல் கூட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டவுடன் தன்னைத் தானே நிர்வகிக்கும் நல்லதொரு வலுவான அமைப்பாக உருவாக்குதல் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்பாகும். இதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1. கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் களப்பயணம் செல்ல உதவுதல். 2. கூட்டமைப்பு அலுவலகம் அமைத்தல் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கு உதவுதல். 3. கூட்டமைப்பை சங்கமாக பதிவு செய்ய உதவுதல். 4. கூட்டமைப்புக்கு அமுத சுரபி நிதியினை வழங்குதல். 5. கூட்டமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல். 1. கூட்டமைப்பிற்கான பயிற்சி கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பின்வரும் பயிற்சிகளை உரிய காலத்தில் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மறுசீரமைக்கபட்ட ஊராட்சியளவிலான கூட்டமைப்பினை வலுப்படுத்துதல் வரிசை எண் பயிற்சி வகை பங்கேற்பாளர்கள் 1 கூட்டமைப்பிற்கான அடிப்படை ஆளுமை பயிற்சி செயற்குழு மற்றும் துணை குழு உறுப்பினர்கள், கணக்காளர், சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் 2 நிதி மேலாண்மை பயிற்சி 3 கணக்கு பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி கணக்காளர், நிர்வாகிகள் 4 களப்பயணம் செயற்குழு மற்றும் துணை குழு உறுப்பினர்கள், கணக்காளர் * இதற்கான செலவினங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன் வளர்ப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். 2. கூட்டமைப்பிற்கான அலுவலகம் அமைத்தல் ( ம ) நிர்வாக செலவினம் கூட்டமைப்பு தன் அலுவலகத்தை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்தோ தனியாகவோ (தேவைப்படின்) செயல்படுத்தலாம். அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை சமுதாய கொள்முதல் விதிமுறைப்படி வாங்குதல் அவசியம். கூட்டமைப்பு பெயர் பலகை மற்றும் தகவல் பலகை அமைத்தல். அலுவலகத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் (ஒரே முறை மேற்கொள்ளக் கூடிய செலவினம்). அலுவலக நடைமுறை செலவினங்கள் (கணக்காளர் மதிப்பூதியம், எழுது பொருள், போக்குவரத்து செலவுகள் போன்றவை). கூட்டமைப்பு அமுத சுரபி நிதி பெற்ற மாதம் முதல் 6 மாதங்கள் வரை அதன் அனைத்து செலவினங்களையும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செய்யலாம். 3. கூட்டமைப்பினை 1975 சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் கூட்டமைப்பு சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்பாக செயல்படுவதற்காக சங்கங்கள் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். கூட்டமைப்பு தேவைப்படும் போது வங்கியிடமிருந்து பெருங் கடன் பெற்று நிதி நிறுவனமாகச் செயல்படவும், தொழில் புரியும் குழுக்களுக்கு கொள்முதல், விற்பனை போன்றவற்றில் உதவவும், இலாபகரமான தொழிலை ஏற்று நடத்தவும் சங்கமாக செயல்படுவது அவசியமாகிறது. 4. அமுத சுரபி நிதி விடுவித்தல் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மாவட்ட அலுவலகத்திலிருந்து பெறும் அமுத சுரபி நிதியை குறிப்பிட்ட இலக்குகளை கூட்டமைப்பு , அடைந்த உடன் விடுவிக்கும். 5. கூட்டமைப்பின் முன்னேற்றத்தினை கண்காணித்தல் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகள் (நிர்வாகிகள் அல்லாதவர்கள்) கூட்டமைப்பு செயற்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு அமுசுரபி நிதி செயல்பாடு குறித்த ஆலோசனைகளைத் தருவார்கள். கூட்டமைப்பு அளிக்கும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையினை பெறுவதன் மூலமாகவும், ஆராய்வதன் மூலமாகவும் கண்காணிக்கப்படும். பொதுவாக கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதன் மூலம் கூட்டமைப்பின் முன்னேற்றத்தினை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கண்காணிக்கும். 6. கண்காணிக்கப்படும் முக்கிய காரணிகள் 1. கூட்டமைப்பு உயிர் மூச்சின் படி செயல்படுவதை உறுதி செய்தல். 2. ஊராட்சியில் உள்ள தகுதி வாய்ந்த அனைத்து சுய உதவி குழுக்களும் கூட்டமைப்பில் இணைந்திருப்பதை உறுதி செய்தல். 3. கூட்டமைப்பின் துணை குழுக்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதலை உறுதி செய்தல். 4. அமுத சுரபி நிதியின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையில் குறைந்த பட்சம் 80% இலக்கு மக்கள் பெற்றிருப்பதையும் மற்றும் குறைந்த பட்சம் 70% தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்தல். 5. கூட்டமைப்பின் கடன் வசூல் சதவீதம் 100% இருப்பதை உறுதி செய்தல். 6. கூட்டமைப்பின் முன்னேற்றத்தினை கிராம சபைக்கு தெரிவித்தல். மேலும் சமூக தணிக்கை குழுவும் நடவடிக்கைகள், அமுத சுரபி நிதி பயன்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை கண்காணித்து கிராம சபைக்கும், பொது குழுவிற்கும் அறிக்கை அளிக்கும். கூட்டமைப்பின் விதிமுறைகள் கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கான அவசியம் கூட்டமைப்பினை அமைப்பு ரீதியாக உருவாக்க... கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் கடமை உணர்ந்து செயல்பட... தவறான செயல்பாடுகளைத் தவிர்த்திட... கூட்டமைப்பு தொடர்ந்து சீராகச் செயல்பட்டு நோக்கத்தை அடைய... கூட்டமைப்பின் நிதி செயல்பாட்டினை முறைப்படுத்திட... விதிமுறைகள் உருவாக்குதல் கீழ்க்கண்ட முக்கிய தலைப்புகளில் விதிமுறைகளை உருவாக்கலாம். உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக கூட்டம் நடத்துதல் உறுப்பினர் கட்டணம், சந்தா, பங்குத் தொகை போன்ற வரவினம் தொடர்பாக கடன் வழங்குதல், திரும்பப் பெறுதல், வட்டி நிர்ணயம் செய்தல் தொடர்பாக நிர்வாகிகள் சுழற்சி தொடர்பாக ஊராட்சி நடவடிக்கைளில் பங்கேற்றல் தொடர்பாக குறிப்பு ஒவ்வொரு கூட்டமைப்பும் தங்களுக்கு ஏற்ற விதிமுறைகளை உறுப்பினர் குழுக்களிடம் விவாதித்து உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இவ்விதிமுறைகளை “சங்க சார்பதிவாளருடன்” ஆவணப்படுத்திட வேண்டும். கூட்டமைப்பின் பதிவேடுகள் அ. பதிவேடுகளின் முக்கியத்துவம் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கும், பண நடவடிக்கைகளுக்கும் பதிவேடுகள் நிரந்தர ஆதாரமாகும். வெளிப்படையான நிதி நிர்வாகத்திற்கு கணக்குப் பதிவேடுகள் அவசியம். கூட்டமைப்பின் வரவு செலவு, இலாப நஷ்டம், சொத்து மற்றும் பொறுப்புக்களை அறிந்திட கணக்கு பதிவேடுகள் உதவும். பதிவேடுகள் மூலம் கூட்டமைப்பின் செயல்பாடுகளின் தரத்தை யாவரும் அறியலாம். ஆ. கூட்டமைப்பில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் 1. தீர்மான புத்தகம் 2. வரவு ரசீது 3. செலவு ரசீது / பணம் பட்டுவாடா ரசீது 4. ரொக்கப் பதிவேடு மற்றும் பொதுப் பேரேடு 5. கடன் விண்ணப்பம் மற்றும் கடன் பேரேடு 6. கடன் கண்காணிப்பு பதிவேடு 7. சொத்து பதிவேடு மற்றும் உறுப்பினர் விபரப் பதிவேடு மற்றும் கூட்டமைப்பு தேவையான கோப்புகளையும் பராமரித்து கொள்ளலாம். இ. பதிவேடுகளின் பயன்கள் 1. தீர்மான புத்தகம் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்கள், விவாதங்கள் மற்றும் தீர்மானங்களை பதிவு செய்திட உதவும் தாய் புத்தகமே தீர்மான புத்தகம் ஆகும். ஒவ்வொரு கூட்டம் முடிந்தவுடன் கருத்துக்களும், தீர்மானங்களும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு கையொப்பம் பெற வேண்டும். 2. வரவு ரசீது கூட்டமைப்பிற்கு வரும் அனைத்து வரவுகளுக்கும் தரப்படும் ஒப்புகை சீட்டே வரவு இரசீது ஆகும். இது பணம் செலுத்துபவருக்கு வழங்கப்படும் ஆதாரமாகும். இது தணிக்கைக்கு மிகவும் உதவுகிறது. 3. பணப்பட்டுவாடா ரசீது கூட்டமைப்பிலிருந்து செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் பணம் பெறுபவர்களிடமிருந்து வாங்கப்படும் ஒப்புகை சீட்டே பணப்பட்டுவாடா ரசீது ஆகும். அனைத்து செலவின நடவடிக்கைகளுக்கும் இதுவே ஆதாரம். ரூ. 500க்கு மேற்பட்ட செலவுகளுக்கு காசோலை மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும். ரூ. 5000க்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்ப் (வருவாய் முத்திரை வில்லை) ஒட்டி கையொப்பம் வாங்க வேண்டும். 4. ரொக்க புத்தகம் மற்றும் பொதுப்பேரேடு ரொக்க புத்தகம் ரொக்க புத்தகத்தில் ரொக்கமாக வரவு செலவு செய்யப்படுவதையும், வங்கி மூலம் செய்யும் வரவு செலவுகளையும் தேதி வாரியாக பதிவு செய்ய வேண்டும். மாதத்தின் இறுதியில் அல்லது மாதத்தின் எந்த தேதியிலும் கையிருப்பு மற்றும் வங்கியிருப்பை கண்டறிய உதவுவது ரொக்க புத்தகமாகும். பொதுப்பேரேடு கூட்டமைப்பின் வரவுகள் மற்றும் செலவுகளை, தலைப்பு வாரியாக தனித்தனியே பதிவு செய்யும் பேரேடு பொதுப்பேரேடு ஆகும். இருப்பு தொகையை கணக்குகளின் தலைப்பு வாரியாக அறிந்து கொள்ள உதவுகிறது. தணிக்கைக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. 5. கடன் விண்ணப்பம் மற்றும் கடன் பேரேடு அ. கடன் விண்ணப்ப பகுதி இப்பதிவேட்டில் கூட்டமைப்பில் பெறப்படும் கடன் விண்ணப்பங்கள் தேதி வாரியாக பதிவு செய்யப்படும். இதன் மூலம் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை, நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் கடன் விவரங்களை அறிய முடியும். குழு கடன் பெறும் போது (காசோலை) உரிய உறுப்பினர்களின் கையொப்பத்தினை இப்பதிவேட்டில் பெற வேண்டும். ஆ. கடன் பேரேடு பகுதி இப்பகுதி மூலம் குறிப்பிட்ட தேதியில் குழுவின் கடன் நிலுவைத் தொகையை அறியலாம். கடன் தவணை தவறாமல் முறையாகச் செலுத்தப்படுகிறதா என்பதை அறியலாம். ஒவ்வொரு குழுவும் செலுத்திய வட்டித் தொகையினை அறியலாம். 6. கடன் கண்காணிப்பு பதிவேடு உறுப்பினர் குழுக்கள் பெற்ற கடன் தொகையில் திரும்ப செலுத்த வேண்டிய தொகை, திரும்ப செலுத்திய தொகை, தவணை தவறிய அசல் மற்றும் வட்டி, இடர்ப்பாட்டில் உள்ள கடன் தொகை போன்றவற்றை பதிவு செய்யும் பேரேடு கடன் கண்காணிப்பு பதிவேடு ஆகும். உறுப்பினர் குழுக்கள் பெற்ற கடன் மற்றும் திருப்புதலை கண்காணிக்க உதவுகிறது. குழுவின் கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சீராக உள்ளதா என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. 7. சொத்துப் பதிவேடு மற்றும் உறுப்பினர் விவரப் பதிவேடு சொத்துப் பதிவேடு கூட்டமைப்பில் உள்ள அசையும், அசையா சொத்துக்களை பட்டியலிடவும், அவற்றின் வாங்கிய விலை, பொருளின் இருப்பிடம், பொருளின் தற்போதைய நிலை போன்ற விவரங்களை பதிவு செய்து பராமரிக்கும் பதிவேடு சொத்து பதிவேடு ஆகும். உறுப்பினர் குழுக்கள் விவரப் பதிவேடு கூட்டமைப்பில் சேர்ந்துள்ள குழுக்களின் அடிப்படை விவரத்தை பதிவு செய்யும் பதிவேடு உறுப்பினர் குழு விவரப் பதிவேடு ஆகும். கூட்டமைப்பில் சேர்ந்துள்ள குழுக்களின் விவரங்கள் மற்றும் சந்தா விவரங்களை அறியலாம். 8. கூட்டமைப்பின் வங்கி கணக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு கீழ்கண்ட இரண்டு வங்கி கணக்குகள் துவங்கி செயல்படுத்த வேண்டும். 1. பொது நிதி கணக்கு (சந்தா, நுழைவுகட்டணம், வட்டி, பிற வரவுகள்) 2. அமுத சுரபி (பங்குத்தொகை, அமுதசுரபி நிதி) கணக்கு தேவையின் அடிப்படையில் ஊக்க நிதி கணக்கு துவங்கலாம். நிதி திரட்டும் வழிமுறைகள் அ. நிதி ஆதாரத்திற்கான வழிகள் 1. உறுப்பினர் கட்டணம் குழுக்களை கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் போது உறுப்பினர் கட்டணம் (குறைந்தபட்சம் 20 ரூபாய்) வசூலித்துக் கொள்ளலாம். 2. சந்தா உறுப்பினர் குழுக்களிடம் மாதந்தோறும் அல்லது காலாண்டிற்கு ஒரு முறை (அ) ஆண்டு சந்தா (குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு உறுப்பினருக்கு ரூ. 5) சந்தா வசூலித்துக் கொள்ளலாம். 3. பங்குதொகை எந்த ஒரு நிறுவனத்திற்கும் அல்லது தொழிலுக்கும் தனது சொந்த பங்களிப்பு முக்கியமான நிதி ஆதாரமாகும். கூட்டமைப்பு உறுப்பினர் குழுக்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சமமாகவோ அல்லது குழுவால் இயன்ற தொகையோ கூட்டமைப்பிற்கு பங்களிப்பாக பெறலாம். (உதாரணமாக ஒரு உறுப்பினருக்கு ரூ. 200 வீதம் பெறுதல்.) 4. சேவை கட்டணம் கூட்டமைப்பான உறுப்பினர் குழுக்களுக்கு, தனி நபருக்கு மற்றும் பிற அமைப்புகளுக்கு செய்யும் சில பணிகளுக்கு சேவை கட்டணம் (குறைந்த பட்சம் ரூபாய் 10) வசூலித்து கொள்ளலாம். (நிதி இணைப்பு, தணிக்கை , பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல் போன்றவை) 5. அபராதம் கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறும் உறுப்பினர் குழுக்களிடம் விதிமுறைப்படி அபராதம் வசூலிக்கலாம் 6. அரசு நிதி உதவி முறையாக உருவாக்கப்பட்டு செயல்படும் கூட்டமைப்பு அரசு திட்டங்களை செயல்படுத்த நிதியினை பெறலாம். (அமுத சுரபி நிதி, கூட்டமைப்பு ஊக்க நிதி போன்றவை) 7. பணி ஒப்பந்தங்கள் அரசு துறைகளிடமும் பிற அமைப்புகளிடமும் கூட்டமைப்பு தன் பெயரில் பணி ஒப்பந்தங்களை பெற்று வருவாய் திரட்டலாம். (உதாரணமாக... கண்மாய், ஏரி, குளம் ஆழப்படுத்துதல் மற்றும் தூர் வாருதல் மரங்கள் ஏலம் மற்றும் குத்தகை எடுத்தல் போன்றவை) 8. பெருங்கடன் வங்கி மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து பெருங்கடன் பெற்று உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் வருவாய் திரட்டலாம். 9. தொழில் செய்தல் கூட்டமைப்பு அப்பகுதியில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வருவாய் ஈட்டக் கூடிய தொழிலை குழுக்களின் நன்மைக்காக தொடங்கி செலுத்தலாம் . 10. விற்பனை சுய உதவிக் ழுக்களின் உற்பத்தி பொருட்களையும் விவசாய பொருட்களையும் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்தல் கச்சா பொருட்கள், விவசாய இடு பொருட்கள், நுகர் பொருட்கள் உறுப்பினர்களின் தேவைக்கேற்ப மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகித்தல் 11. பரிசு மற்றும் நன்கொடை கூட்டமைப்பு நிலைத்த தன்மை அடையும் நோக்கில் அரசு, தனி நபர் அல்லது பிற அமைப்பால் அளிக்கப்படும் உதவி. (மணிமேகலை விருது போன்றவை) ஆ. கூட்டமைப்பின் வரவும் செலவும் கூட்டமைப்பு வருமானத்திற்குள் செலவு செய்து நிலைத்த தன்மை அடைய வேண்டும். வரவுகள்: வட்டி வருமானம், சேவைத் தொகை, திட்ட செயல்பாட்டு நிர்வாக நிதி, தொழில் இலாபம், நன்கொடை போன்றவை செலவினங்கள்: நிர்வாகச் செலவு, கணக்காளர் மதிப்பூதியம், போக்குவரத்து செலவு, வாராக் கடன் இழப்பு தொகை போன்றவை குறிப்பு: கணக்காளருக்கு மதிப்பூதியம் பின்வருமாறு 1 வருடத்திற்கு - கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வழங்கலாம் 1 வருடத்திற்கு பின் - கூட்டமைப்பு மேற்கொள்ளும் நிதி மேலாளர் வங்கி பெருங்கடன் பெற்று சிறப்பாக செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தங்களிடம் உள்ள நிதியினை சிறப்பாக பயன்படுத்திடவும் பல்வேறு நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்ளவும் சுய உதவி குழுக்களின் நிதியினை பயன்படுத்திட வழிகாட்டுவதற்கும் தேவையின் அடிப்படையில் நிதி மேலாளார் ஒருவரை பணியாளராக நியமனம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பணியமர்தப்படும் நிதி மேலாளர் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற்றிருப்பதுடன் கணக்கு பராமரிப்பு, வங்கி நடவடிக்கைகளில் நன்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவருக்கான ஊக்கத்தொகையினை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு முடிவு செய்து பொது நிதியிலிருந்து வழங்கலாம். ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்