செல்வமகள் சேமிப்புத் திட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டம், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அதிகாரமளித்தல் நடவடிக்கைகளுக்கு சக்திவாய்ந்த அடையாளமாகத் திகழ்கிறது. இது அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவதற்கும், அவர்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' திட்டத்தின் கீழ், 22 ஜனவரி 2015 அன்று தொடங்கப்பட்ட இந்த சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைக்கு உதவிடும் என்று கருதப்பட்டது. இது நிதிப் பாதுகாப்பு, சமூக மாற்றத்திற்கு இடையே ஒரு பாலமாக வடிவமைக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக முன்கூட்டியே திட்டமிட குடும்பங்களை ஊக்குவிப்பதன் மூலம், இத்திட்டம் அடித்தட்டு மக்களிடையே தன்னம்பிக்கை, உள்ளடக்கம், நீண்ட கால முன்னேற்றம் என்ற உணர்வை ஏற்படுத்த உதவியுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 22 ஜனவரி 2026 அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த வாக்குறுதியில் லட்சக்கணக்கான குடும்பங்களின் கூட்டு நம்பிக்கைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, 4.53 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் வாயிலாக, குடும்பங்களையும், சமூகங்களையும், மேம்படுத்துவதுடன் நாட்டையும் வலுப்படுத்துகிறது. கணக்கைத் தொடங்குதல் பெண் குழந்தை பிறந்தது முதல் அவள் 10 வயதை அடையும் வரை இந்த இந்தக் கணக்கைத் தொடங்கலாம். கணக்கைத் தொடங்கும் காலம் முதல் முதிர்ச்சி / கணக்கை நிறைவு செய்யும் காலம் வரை இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு பெண் குழந்தையும் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பெற்றோர்கள் அதிக பட்சமாக தங்களின் இரணடு பெண் குழந்தைகளுக்கு கணக்குகளைத் தொடங்கலாம். இருப்பினும், இரட்டையர்கள் அல்லது ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் அதிக கணக்குகள் தொடங்க விதிவிலக்கு தரப்படும். இந்த கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கணக்கைத் தொடங்குவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை: செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கும் படிவம் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அடையாளச் சான்று குடியிருப்புச் சான்று வைப்புத்தொகை பெற்றோர் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் அல்லது நியமிக்கப்பட்ட வணிக வங்கிக் கிளையிலும் பெண்களுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்ச தொடக்க வைப்புத்தொகை ரூ. 250 ஆகும். மொத்த வருடாந்திர வைப்புத்தொகை வரம்பு ரூ.1,50,000 ஆகும். இதற்கு அதிகப்படியான தொகைக்குவட்டி அளிக்கப்படாது. திருப்பித் தரப்படும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை வைப்புத்தொகை செலுத்தலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்