அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 25,23,373 0-6 வயது குழந்தைகள், 6,82,073 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 46,063 வளரிளம் பெண்கள் என ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் இத்திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ. 2765 கோடி செலவினம் மேற்கொள்ளப்படுள்ளது. பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி போடுதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருந்துவ பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை தகுதியுடைய அனைவரும் தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்து பயன் பெறலாம். சத்துமாவு வழங்கப்படும் அளவு பயனாளிகள் வழங்கப்படும் அளவு(நாள் ஒன்றுக்கு) மாதத்திற்கான மொத்த அளவு 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் 125 கிராம் விதம் 3.125 கி.கி. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 150 கிராம் விதம் 3.750 கி.கி. 2-6 வருடம் வரையிலான குழந்தைகள் 50 கிராம் வீதம் கொழுக்கட்டை, கஞ்சி மற்றும்உருண்டையாக வழங்கப்படுகிறது முட்டை வழங்கப்படும் விதம் பயனாளிகள் வழங்கப்படும் அளவு வழங்கப்படும் இடம் 1-2 வயது வரையிலான குழந்தைகள் 3 முட்டை (வாரத்தில்) வீட்டிற்கு வழங்கப்படும் 2-6 வருடம் வரையிலான குழந்தைகள் வாரம் 3 நாட்கள் முட்டையுடன் மதிய உணவு குழந்தை மையத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கெட் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் 60 கிராம் 2-6 வருடம் வரையிலான குழந்தைகள் 30 கிராம் குழந்தைகளுக்கான சேவைகள் 6 மாதம் முதல் 1 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 125 கிராம் வீதம் சத்துமாவு 15 நாட்களுக்கு ஒரு முறை அரை கிலோ பாக்கெட்டுக்களாக வழங்கப்படுகிறது. அதனுடன் அரை கிலோ கொள்ளளவு கொண்ட காற்று புகா பிளாஸ்டிக் டப்பா வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 125 கிராம் சத்து மாவு வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை 500 கிராம் பாக்கெட்டுகளில் சத்துமாவு வழங்கப்படுகிறது. வாரத்திற்கு மூன்று முட்டைகள் வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் வழங்கப்படுகின்றது. 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக நாளொன்றுக்கு 60 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. குழந்தைகள் மையத்திற்கு வருகை தரும் 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு ஏலக்காய் (அ) வெண்ணிலா (அ) ஸ்ட்ராபெர்ரி (அ) சாக்லேட் மணமூட்டப்பட்ட 5௦ கிராம் சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி மற்றும் சத்துமாவு உருண்டையாக காலையிலும், மாலையிலும் வழங்கப்படுகிறது. மேலும், வாரத்தில் 6 நாட்களுக்கு சூடான சமைத்த சத்தான உணவுகள் மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தக்காளி சாதம் + வேகவைத்த முட்டை செவ்வாய்க்கிழமை கலவை சாதம் * வேகவைத்த கருப்புக் கொண்டைக்கடலை (அல்லது) வேகவைத்த பச்சைப் பயறு புதன்கிழமை காய்கறிப்புலவு + வேகவைத்த முட்டை வியாழக்கிழமை எலுமிச்சை சாதம் + வேகவைத்த முட்டை வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் + வேக வைத்த உருளைக்கிழங்கு சனிக்கிழமை கலவை சாதம் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அரிசி மற்றும் பருப்பு மேலே கூறப்பட்டவை தவிர. 2 முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 30 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது. வருடத்திற்கு இருமுறை குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. குழந்தை மைய பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் மாதந்தோறும் எடுக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி போஷன் ட்ராக்கர் (POSHAN Tracker) செயலியின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இரும்புச் சத்து திரவம் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரு முறை 1 மில்லி வழங்கப்படுகிறது. மேலும் குடற்பூச்சி நீக்க மருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 2 முறை வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது. ஆரம்பகால குழந்தை பராமரிப்புக் கல்வி 2 முதல் 6 வயது வரையிலான மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்கு ஆடிப்பாடி விளையாடு பாப்பா பாடத்திட்டதின்படி விளையாட்டு மூலம் மாதம் ஒரு தலைப்பின் மூலம், உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. முன் பருவ கல்விக்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு இரண்டு இணை ஆயத்த வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சேவைகள் குழந்தை மையத்தில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் சத்துமாவு 15 நாட்களுக்கு ஒரு முறை 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படுகிறது. அதனுடன் அரை கிலோ கொள்ளளவு கொண்ட காற்று புகா பிளாஸ்டிக் டப்பா வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் பற்றி கற்றுத் தரப்படுகிறது. சத்துணவு மற்றும் சுகாதார கல்வி சத்துணவு மற்றும் சுகாதார கல்வி குழந்தைகள் மையத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைக்கு உணவூட்டுதல், கணவன்மார்களுக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இருமுறை மையத்தில் நடத்தப்படுகின்றது. தமிழ்நாடு ஊட்டச்சத்து குறைபாடில்லாத நிலையை அடைந்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிறப்பு முதல் 6 வயது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், "ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு" என்ற நிலையை அடைய, 07.05.2022 அன்று “ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். 37.27 இலட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிப்பட்டனர். ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது இதில் 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11,917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துமாவு, பேரிச்சம்பழம், ஆவின்நெய், புரோட்டின் பிஸ்கட், இரும்புசத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் முறையே 2 மற்றும் 1 தாய்ப்பாலின் தரம் மற்றும் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த வழங்கப்பட்டுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 93,200 குழந்தைகளுக்கு, சிறப்பு உணவு (RUTF) வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பயன்களை மக்கள் நன்கு தெரிந்து கொண்டு அருகில் உள்ள குழந்தை மையங்கள் மூலமாக அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9