முன்னுரை

வர்த்தகம், வணிகம், சமுதாயம் ஆகியவற்றின் அதிகமான தேவைகள் பேரளவு தொழில் நிறுவனங்களை, தோற்றுவிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தின. தொழில் நிறுவனங்களின் தற்போதைய போக்கு (trend) விரிவாக்கம் மற்றும் பன்முகப்படுத்துதல் (Diversification) வாயிலாக தங்களுடைய அளவினைப் பெருக்கிக்கொள்வதேயாகும். பேரளவு நிறுவனங்கள் பெரும்பாலும் கூட்டு பங்கு நிறும் அமைப்பு முறையில் நிறுவப்படுகின்றன. இந்நிறுவனங்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்குத் தனியார் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களையே சார்ந்திருக்கின்றன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான நீண்டகால (மொத்த) முதல் குறிப்பிட்ட தொகை மதிப்புடைய அலகுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை 'பங்குகள்' எனப்படும். நிறுமங்கள் அவற்றைப் பொதுமக்களுக்கு வெளியிட்டு நிறுவனத்துக்கான சொந்த முதலைப் பெறுகின்றன. அதாவது பங்குகள் உடமை உரிமையைக் காட்டுகிறது. அதிகப்படியாகத் தேவையாக இருக்கின்ற மத்திய மற்றும் குறுகியகால முதலை, கடன் பத்திரங்களை விற்பதின் மூலம் பெறுகின்றது. கடனீட்டுப் பத்திரம் என்பது ஒரு நிறுமம் பொதுமக்களிடமிருந்து கடன் வாங்கியதற்கான உறுதிமொழிப் பத்திரமாகும். கடனீட்டுப் பத்திரங்கள் கடனீந்தோரின் கடனீட்டு உரிமையைக் காட்டுகிறது.

பத்திரங்கள்

ஒரு பத்திரம் என்பது ஒருவரின் உடைமை உரிமை (பங்கு) அல்லது கடனீட்டு உரிமையைக் (கடன் பத்திரம்) குறிக்கும் ஒரு சான்றிதழ் அல்லது ஆவணம். பத்திரங்கள் கீழ்வருவனவற்றை உள்ளடக்கியது:

கூட்டு நிறுவப் பத்திரங்கள், பங்குகள் - பங்குத் தொகுப்புகள் (Stock), பிணையங்கள் (Bonds) கடன் பத்திரங்கள், நிறுமக் கடன் பத்திரங்கள் (Debentures), அரசுப் பத்திரங்கள்.

பத்திரச் சந்தை : பத்திரச் சந்தை என்ற சொல் பத்திரங்களை வாங்கி விற்கப்படும் இடம் மற்றும் வாங்கி விற்பவர்களையும் குறிக்கும். அது பத்திரங்களை வாங்குபவர் மற்றும் விற்பவர் நிறுமப் பத்திரங்கள் மற்றும் அரசு பத்திரங்களை வாங்கி விற்பனை செய்ய உதவும் தரகர்கள், முகமை அமைப்புகள் போன்றவைகளாகும். பத்திரச் சந்தையை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:

முதன்மைச் சந்தை

இரண்டாம் நிலைச் சந்தை

முதன்மைச் சந்தை புதிய வெளியீடுகளின் சந்தையைக் குறிக்கும். இரண்டாம் நிலைச் சந்தை என்பது, முதன்மைச் சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகளை மறு விற்பனை செய்வதாகும்.

புதிய வெளியீட்டுச் சந்தைக்கென்று தனிப்பட்ட உடைமைத் தோற்றம் (Physical existence) ஏதுமில்லை. புதிய நிறுமங்களின் புதிய பங்கு அல்லது புதிய மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுமங்களின் கடன் பத்திரங்களை வெளியிடும் செயல்பாட்டைக் கொண்டதாகும். இப்பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகின்றன. இது நிதி தேவைப்படும் நிறுமங்களுக்கும் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்களுக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக, புதிய பங்குகளை வெளியிடும் நிறுமங்களுக்குத் தரகர்கள், பொறுப்புறுதி தருபவர்கள் (Underwriters) வர்த்தக வங்கிகள் ஆகியவை உதவுகின்றன. நிறுமத்தின் பங்குகளை வாங்குவதற்கு விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் அதற்கென உள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்ப படிவங்களை தரகர்கள், பொறுப்புறுதி தருபவர்கள் ஆகியோரிடமிருந்து பெறலாம்.

முதலீட்டாளர்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் சேமிப்பைப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பொழுது, அப்பத்திரங்களை விற்கக்கூடிய தன்மை (ability) இருத்தல் வேண்டும். பத்திரங்கள் விற்பனை என்பது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும். எனவே, பத்திரங்களை வெளியிடும் நிறுமங்கள் பத்திரங்களை வெளியிடுவதில் தேர்ந்தவர்களான முகவர்கள், நிறுவனங்களின் சேவையை உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

புதிய வெளியீடுகளுக்கான தொழில் முறைகள்

புதிய வெளியீடுகளின் வாயிலாக நிதி திரட்டும் நிறுமங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

அ. பொது வெளியீடு (Public issues)

ஆ. விற்பனைக்கான முனைவு (Offer for sale)

இ. இடைநிலையர்கள் (Intermediaries)

1. தனியார் ஒதுக்கு (Private placement)

2. சில்லறை இடை நிலையர்கள்

3. மேலாண்மைத் தரகர்கள்

ஈ. ஒப்புறுதியளித்தல் (Underwriting)

உ. உரிமை வெளியீடு (Rights Issue)

அ) பொது வெளியீடு

இது கூட்டுப் பங்கு நிறுமங்கள் பொதுவாகப் பயன்படுத்தும் முறை. இது, பொதுமக்களுக்கு நேரடியாக பங்குகளைக் குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்வதாகும். ஒரு நிறுமம் அறிக்கை அல்லது விளம்பரத்தின் மூலமாக பொதுமக்களைத் தன்னுடைய பங்குகளில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்கும். அவ்வகையான சுற்றறிக்கை அல்லது அறிக்கை அல்லது விளம்பரம் 'தகவலறிக்கை' எனப்படும் ஒரு சட்ட ஆவணமாகும். பொதுவாக இடைநிலையர்கள் இம் முறையிலான வெளியீடுகளில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இது மிக அதிக செலவை ஏற்படுத்தும் முறையாகும்.

ஆ. விற்பனைக்கான முனைவு (விற்பதற்கான முனைவு விடுத்தல்)

இம்முறையில் ‘பங்குகள் வெளியீட்டகம்' (Issue Houses) எனப்படும் இடைநிலையர்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. நிறுமப் பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் பங்கு வெளியீட்டகங்களுக்கு ஒதுக்குகிறது அல்லது ஒதுக்குவதற்கு ஒப்புக்கொள்கிறது. வெளியீட்டகங்கள் அப்பங்குகளைப் பொதுமக்களுக்கு அதிகமான விலையில் விற்றுவிடுகிறது. முதலீட்டாளர்கள் அவ்வாறு பங்குகளை வாங்கும்போது அது நேரடி ஒதுக்கீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இ) இடைநிலையர்கள் வாயிலாக புதிய பங்குகளை வெளியிடுவதற்கு நிறுமங்கள் இடைநிலையர்களின் சேவையை நாடுகின்றன. தரகர்கள், வெளியீட்டகங்கள், ஒப்புறுதியளிப்பவர்கள் போன்ற இடைநிலையர்கள் பங்குகளை வெளியிடும் நிறுமத்திடமிருந்து வாங்கித் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து விடுவர்.

தனியார் ஒதுக்கு

சில சமயங்களில் இடைநிலையர்கள் பங்குகளைத் தம் பெயரில் வாங்கமாட்டார்கள். பங்குகளை விற்பதில் அவர்கள் முகவர்களாகச் செயல்படுவர். பங்குகளைத் தம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வர். அத்தகைய விற்பனை தனியார் ஒதுக்கு (தனியார் அமர்த்துதல்) எனப்படும். இம்முறையானது பொது வெளியீட்டு முறை, விற்பனைக்கான முனைவு ஆகியவற்றைவிடச் சிக்கனமானது.

சில்லறை இடைநிலையர்கள் வாயிலாக

சில சமயங்களில் நிறுமம் முகவர்கள், விற்பாண்மையர் (sales men) பங்குதாரர்களைத் தன் பங்குகளுக்கான சந்தையை ஏற்படுத்துவதற்காக அமர்த்துகிறது. ஆனால் இத்தரகர், முகவர்கள் மற்றைய இடைநிலையர்களும் பங்குகள் விற்பதற்கான உத்தரவாதங்கள் அல்லது ஒப்புறுதி அளிப்பதில்லை.

மேலாண்மைத் தரகர்கள்

பிணையப் பத்திரங்களின் விற்பனையேற்பாட்டினைச் செய்வதில் நிறுமங்களுக்கு மேலாண்மைத் தரகர்கள் பெருமளவில் உதவி செய்து வருகிறார்கள். போட்டி விடுப்புகளினால் நிறுமங்களுக்கிடையில் மோதுதல் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம், அவர்கள் நிறுமங்களுக்குப் பங்குகள் வெளியிடப்பட வேண்டிய சரியான காலம், நிபந்தனைகள் ஆகியவைகளைப் பற்றி அறிவுரை வழங்குகின்றனர். பங்கு மாற்று நிலையங்களின் பட்டியலில் நிறுமத்தின் பங்குகள் இடம் பெறுமாறு செய்வது, தகவலறிக்கையை எழுதி அதனைத் தயார் செய்வது, பங்கு விடுப்புக்கு முந்தைய விளம்பரம் ஆகியவைகளைப் பற்றிய அறிவுரைகளையும் அவர்கள் வழங்குகின்றனர்.

ஈ.) ஒப்புறுதியளித்தல்

பேரளவு விடுப்புகள் ஒப்புறுதியளித்தல் முறையில் வெளியிடப்படுகின்றன. இந்த முறையில், ஒப்புறுதியர்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட பங்குகள் முழுவதுமாக எடுத்துக் கொள்ளப்படும் (subscribe) என வாக்குறுதியளிக்கின்றனர். அவ்வாறு பொதுமக்களால் எடுத்துக்கொள்ளப்படாத பங்குகள் முழுவதையும் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர்.

உ) உரிமை வெளியீடுகள்

ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுமம், தன்னுடைய தொழில் விரிவுபடுத்தலுக்குத் தேவையான நிதியை இரண்டு வழிகளில் பெறலாம். அவை,

உரிமை வெளியீடு (Rights issue)

மேலூதியப் பங்குகளை விடுத்தல் (Bonus shares)

உரிமை வெளியீட்டில், ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களுக்கு, அவர்கள் கொண்டுள்ள பங்குகளின் விகிதத்தில் உரிமைப் பங்குகள் ஒதுக்கப்படுகின்றன. மேலூதியப் பங்கு விடுப்பு புதிய முதலைத் திரட்டுவதற்கு விடுப்பதில்லை. பங்குதார்களுக்கான பொதுக் காப்பை (General Reserve) முதலாக மாற்றுவதற்காக மேலூதியப் பங்குகள் விடுக்கப்படுகின்றன.

மேற்கண்ட வெளியீட்டு முறைகளில் பொது வெளியீடு முறை மற்றும் உரிமை வெளியீடுகள் முறை ஆகியவையே இந்தியாவில் பங்குகளை விற்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான முறைகளாகும்.

புதிய வெளியீடுகளுக்கான செயல் முறைகள் (Methods of new issues)

தகவலறிக்கை வெளியிடுதல்

பொதுமக்களிடமிருந்து புதிய பங்குகள் வாயிலாக நிதி திரட்ட விரும்பும் நிறுமம் பொதுமக்கள் அறிந்த ஒரு நிறுமமாக இருத்தல் வேண்டும். அந்நிறுமம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். அதனுடைய தற்போதைய நிதி நிலைமை, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். தகவலறிக்கை வெளியிடுவதன் மூலம் இவையனைத்தும் செய்யப்படலாம். எந்த ஒரு ஆவணம் தகவலறிக்கை என்ற பெயரில் வெளியிடப்படுகிறதோ அல்லது எந்த ஒரு சுற்றறிக்கை, விளம்பரம் அல்லது பிற ஆவணங்கள், நிறுமத்தின் பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றை வாங்க பொதுமக்களை அழைக்கிறதோ அவ்வாவணம் தகவலறிக்கை எனப்படுகிறது.

விண்ணப்பம்

தகவலறிக்கை வெளிவந்தபின் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் நிறுமத்தின் பங்குகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவங்களைப் புதிய பங்கு வெளியீட்டில் உதவும் தரகர்கள், வங்கியர் ஆகியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் எத்தனைப் பங்குகள் வேண்டுமானாலும் ஒரே விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் தனி நபர் பெயரிலோ, நிறுமங்கள் பெயரிலோ இருக்கலாம். பொதுவாக, விண்ணப்பத்துடன் விண்ணப்பத் தொகையை விண்ணப்பதாரர் செலுத்தவேண்டும். அது ஒரு பங்குத்தொகையில் 5 விழுக்காட்டிற்குக் குறைவாக இருத்தல் கூடாது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஏதாவது ஒரு அட்டவணையிலிட்ட வங்கியில் இதற்கென தொடங்கப்பட்ட தனிக்கணக்கில் வைக்கப்பட வேண்டும்.

நிறுமம் பங்கு விண்ணப்பம் பெறுவதற்கு உரிய கால அளவை தகவலறிக்கையில் வெளியிடும். அது, பங்கொப்பப் பட்டியல் திறந்திருத்தல் (Opening of subscription list) எனப்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது பங்கொப்பப் பட்டியலைத் திறந்து வைத்திருத்தல் அவசியம்.

பங்கு மாற்றகத்தில் பட்டியலிடல் (Listing of Securities)

பங்கு மாற்றகத்தில் பட்டியலிடுவதால், ஒரு நிறுமம், அதனுடைய நிதி நிலைமை, பங்குகளைச் சந்தையிடுதல் ஆகியவற்றைப் பற்றிப் பொதுமக்களின் மனதில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தும். புதிய வெளியீட்டின் தகவலறிக்கையில் அங்கீகரிப்பட்ட (recognized) பங்கு மாற்றகத்தில் பங்குகளைப் பட்டியலிடுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய செய்தி கொடுக்கப்பட வேண்டும்.

பங்கு ஒதுக்கீடு

பங்கொப்பப் பட்டியல் திறந்திருப்பதற்கான காலக்கெடு முடிந்தவுடன் நிறுமம் விண்ணப்பதாரர்களுக்குப் பங்குகளை ஒதுக்கீடு செய்யலாம். பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டபின் ஒதுக்கீட்டாளர்கள் நிறுமத்தின் பங்குதாரர் ஆகின்றனர்.

குறுமப் பங்கொப்பம் (Minimum subscription) பெறப்பட்டவுடன் தான் பங்கு ஒதுக்கீடு செய்யலாம். இந்த குறுமப் பங்கொப்ப அளவு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் மொத்த பங்குத் தொகையில் 90% இருத்தல் வேண்டும். இத்தொகை தகவலறிக்கையில் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இயக்குநரவை பாரபட்சமின்றியும் வரம்புகள் ஏதும் விதிக்காமலும் பங்கு ஒதுக்கீடு செய்தல் வேண்டும். வெளியிடப்பட்ட அனைத்து பங்குகளும் பங்கொப்பமிட்டிருந்தால் முழுவதுமாக ஒதுக்கீடு செய்யப்படலாம். அதிகமான பங்கொப்ப விண்ணப்பம் (excess subscription) இருந்தால் அனைத்து இயக்குநர்கள் எல்லா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்கள் விண்ணப்பம் செய்த விகிதத்தில் (Prorata) அல்லது சில விண்ணப்பதாரர்களுக்கு முழுவதுமாகவும் சிலருடைய விண்ணப்பத்தைக் ரத்து செய்தும் ஒதுக்கீடு செய்யலாம். அதிக பங்கொப்பம் இருந்தால் பங்கு மாற்றியகத்துடன் கலந்தாலோசித்து ஒதுக்கீடு திட்டத்தை முடிவு செய்தல் வேண்டும்.

ஒதுக்கீடு / வருத்தமடல் (Letter of Allotment / Letter of Regret)

பங்கு ஒதுக்கீடு செய்த பின், ஒதுக்கீட்டாளர்களுக்குக் கடிதம் அல்லது பங்கு ஆவணம் (Share Certificate) குறிப்பிட்ட நாட்களுக்குள் அதாவது பங்கொப்பப் பட்டியலின் கால அளவு முடிந்த தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் அனுப்பப்படுதல் வேண்டும். ஒதுக்கீடு பெறாத விண்ணப்பதாரர்களுக்கு வருத்த மடலுடன் விண்ணப்பத் தொகையைத் திருப்பிக் கொடுப்பதற்கான காசோலையையும் அனுப்புதல் வேண்டும்.

இரண்டாம் நிலைச் சந்தை (Secondary market)

இரண்டாம் நிலைச்சந்தை என்பது முதன்மைச் சந்தையில் வெளியிட்ட பத்திரங்களை மறு விற்பனை செய்யும் சந்தையாகும். இரண்டாம் நிலைச் சந்தையின் வளர்ச்சி முதன்மைச் சந்தையைப் பொறுத்தே உள்ளது. முதன்மைச் சந்தையில் எவ்வளவு அதிகமாக நிறுமங்கள் புதிய பங்குகளை வெளியிடுகின்றதோ அதைப்பொறுத்து இரண்டாம் நிலைச் சந்தையில் வாணிக அளவும் அதிகமாகும். இந்தியாவில், 21 மண்டல பங்கு மாற்றகங்கள், உடனடி பங்கு மாற்றகம் (OTCEI - Over the counter Exchange of India) தேசிய பங்கு மாற்றகம் (NSE) ஆகியவை இரண்டாம் நிலைச் சந்தையில் அடங்கும்.

பங்கு மாற்றகம்

நிறுமத்தினுடைய மூலதனத்தில் ஒரு சிறு பகுதி பங்கு எனப்படும். மாற்றகம் என்பது ஏதாவது ஒரு பொருளை வாங்கி விற்பனை செய்வதற்குரிய இடத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

தனியார் அல்லது பொதுத் துறை நிறுமங்களால் வெளியிடப்பட்ட இரண்டாம் நிலை பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் மத்திய, மாநில அரசால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை வாங்கி விற்குமிடத்தைப் பங்கு மாற்றகம் எனலாம்.

பத்திரங்கள் ஒப்பந்தச் (ஒழுங்காற்றுச்) சட்டம் 1956-ன் படி பங்கு மாற்றகம் என்பது பங்குப் பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், அவற்றைச் சீர்படுத்துதல், கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட பதிவு பெற்ற அல்லது அவ்வாறில்லாத நிறுவனம் அல்லது தனி நபர்களின் அமைப்பாகும். வேரஸ்டின் கூற்றுப்படி, பங்கு மாற்றகம் என்பது வாங்கியவர் மற்றும் விற்பவர் ஒரு இடத்தில் கூடி அனைத்து வகையான பத்திரங்கள், பங்குகளை கையாளும் ஒரு இடமே ஆகும்.

பங்கு மாற்றகத்தின் இயல்புகள்

பங்கு மாற்றகத்தின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு

அது பத்திரங்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற செயல்கள் நடைபெறும் இடமாகும்.

பங்கு மாற்றகங்கள், பதிவு பெற்ற அல்லது அவ்வாறில்லாத தன்னிச்சையான சங்கமாகும்.

பங்கு மாற்றகங்கள் தங்களுக்காக வியாபாரம் செய்வதில்லை. தங்கள் உறுப்பினர்களுக்கு நிறுவப் பத்திரங்களில் வாணிபம் செய்வதற்கான வசதிகளைச் செய்து தருகின்றன.

பங்கு மாற்றாகங்களில் செய்யப்படும் வியாபாரம் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பங்கு மாற்றகமும் தனக்குரிய சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொள்கிறது. பங்கு மாற்றகங்களின் சட்ட திட்டங்களுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்.

புறம்பாக நடக்கும் உறுப்பினர்கள் அப் பதவியிலிருந்து விலக்கப்படுவர். பங்கு மாற்றகங்களின் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட்ட பத்திரங்கள் மட்டுமே இங்குக் கையாளப்படுகின்றன.

நிறுமங்கள், அறக்கட்டளை (trust) அரசுகள், நகராண்மைக் கழகங்கள் போன்றவற்றினுடைய பத்திரங்களும் இங்குக் கையாளப்படுகின்றன.

உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நிர்வாக அமைப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வமைப்பு தன் உறுப்பினர்களின் நடவடிக்கைகளைச் சரியான முறையிலும், நேரடியாகவும், தேவையான அளவிலும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.

உறுப்பினர்கள் மட்டுமே பங்கு மாற்றகங்களின் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். 18 வயது நிரம்பிய எந்த ஒரு நபரும் பங்கு மாற்றகத்தில் உறுப்பினராகலாம்.

உண்மையான முதலீட்டாளர்களும் ஊக வணிகர்களும், பங்கு மாற்றகத்தில் பங்குகளை வாங்கி விற்பனை செய்யலாம்.

பங்கு மாற்றகங்களின் பணிகள் (Functions of Stock Exchanges)

பங்கு மாற்றகங்கள் ஆற்றிடும் பணிகளும் சேவைகளும் பின்வருமாறு.

உடனடிச் சந்தை

பங்கு மாற்றகம் பத்திரங்களுக்கு நீர்மை தன்மையையும் (Liquidity) உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தையையும் ஏற்படுத்துகிறது. இதனால் தங்கள் சேமிப்பைக் குறுகிய காலத்துக்குக் கூட முதலீடு செய்ய மக்களை ஈர்க்கின்றது.

சேமிப்பைத் திரட்டுதல்

தனிப்பட்டோர், வியாபார நிறுவனம், கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் சேமிப்பைத் திரட்டி பத்திரங்களில் முதலீடு செய்ய பங்கு மாற்றகங்கள் உதவுகின்றன.

பிணையங்களின் மதிப்பீடு

பல்வேறு வகையான பங்குகள் மற்றும் பிணையங்களின் விலையைத் தீர்மானிக்க பங்குமாற்று நிலையம் உதவுகிறது. பங்குகளின் விலைகளும் அங்கு நடைபெறும் பேரங்களின் ஏனைய விவரங்களும் பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமான விலைகளாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு அப் பிணையங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவற்றின் நடப்பு விலைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

மூலதன ஆக்கம்

பங்கு மாற்றகம் சேமிப்பைத் திரட்டுவதுடன் பொதுமக்களை சேமிக்கவும் தூண்டுகிறது. இது மூலதன ஆக்கத்திற்கு வழிவகுக்கின்றது.

மூலதனத்தை சரியான முறையில் வழிப்படுத்துதல்

பங்கு மாற்றகம் சேமிப்பை உற்பத்தி வழிகளில் செலுத்துகின்றது. செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுமம் அதிக முதலீடு பெறுவதற்காக பங்குகளை வெளியிடுமாயின், இலாபகரமாக இயங்கும் தன்மை பெற்றிருந்தால்தான் அந்நிறுமம் முதலீடு பெற முடியும். பலவீனமான நிறுவனங்களின் பிணையங்களுக்குப் பொதுமக்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை.

நியாயமான வாணிப தொடர்பு

பங்கு மாற்றகங்களின் நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடைபெறுவதால் நியாயமான வாணிபமும், முதலீடு செய்யப்படும் பணத்துக்குப் பாதுகாப்பும் கிடைக்கின்றது. இதன் உறுப்பினர்கள் இவற்றின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால், அதிக அளவு வாணிபம் (Over trading) சட்ட விரோதமான ஊக வாணிபம் மற்றும் சூழ்ச்சித் திறத்துடன் கையாளுதல் போன்றவை தடுக்கப்படுகின்றன. இவற்றால் சராசரி முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

நிறும மேலாண்மையை ஒழுங்கு படுத்துதல்

பங்கு மாற்றகங்களில் தங்கள் பத்திரங்களைப் பட்டியலிட நிறுமங்கள் பங்கு மாற்றகங்கள் விதிக்கும் பல சட்ட திட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டியுள்ளது. பங்கு மாற்றகங்கள் தங்களுடைய சட்ட திட்டங்கள் மூலம் நிறுமங்களின் மேலாண்மையில் செயல் விளைவுகளை உண்டாக்குகின்றன. இவ்வாறாக பங்கு மாற்றகங்கள் முதலீட்டாளர்களின் நலனுக்காக நிறுமங்களின் மேலாண்மையை ஒழுங்குபடுத்துகின்றன.

தொழில் வளர்ச்சியின் அளவீடு (Barometer of Business Progress)

நாட்டின் தொழில் நிலையை அளவிடும் கருவியாக பங்கு மாற்று நிலையம் செயல்படுகின்றது. பூரிப்பும் மந்தமும் பல்வேறு பத்திரங்களின் விலைக் குறியீட்டினால் பிரதிப்பலிக்கப்படுகின்றன.

பத்திரங்களைப் பட்டியலிடுதல் (Listing of Securities)

பங்கு மாற்றகங்கள் எல்லா நிறுமங்களின் பங்குகள், பங்குத் தொகுதிகள், பிணையப் பத்திரங்களைக் கையாளுவதில்லை. ஒவ்வொரு பங்கு மாற்றகமும் குறிப்பிட்ட நிறுமங்களின் பத்திரங்களை மட்டுமே வாங்க விற்க அனுமதிக்கின்றன. சில சட்ட திட்டங்கள், நிபந்தனைகளுக்குட்பட்டு அவ்வாறு முடிவு செய்ததும் வாணிகப் பட்டியலில் சேர்க்கும். அது பங்கு மாற்றாகங்களின் அலுவல் பட்டியல் எனப்படும். பட்டியலில் சேர்க்கப்படாத பத்திரங்கள் பங்கு மாற்றங்களில் கையாளப்படமாட்டாது. தன் பத்திரங்களைப் பங்கு மாற்றகத்தில் வாணிகம் செய்யப்படுவதற்கு விருப்பமுள்ள நிறுமம் பத்திரங்களைப் பட்டியலிடப்படுவதற்கு விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

பட்டியலிடுதல்

பங்கு மாற்றகங்களின் அலுவல் பட்டியலில் பத்திரங்களைச் சேர்ப்பதே “பட்டியலிடுதல்” எனப்படும். முந்நாளில் பட்டியலிடுதல் விருப்பச் செயலாக இருந்தது. இன்றைய நாளில் பட்டியலிடுதல் என்பது அனைத்து பொது நிறுமங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடுதலின் நன்மைகள்

பட்டியலிடப்படுவதால் ஒரு நிறுமம் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது. நிறுமம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சாதகமான எண்ணத்தையும் பெறுவதற்குப் பட்டியலிடுதல் உதவுகின்றது. நிறுமத்தின் பங்குகளுக்கான சந்தையை விரிவாக்கி எதிர்காலத்தில் தேவையான முதலை எளிதில் பெறுவதற்கு உதவுகின்றது.

பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் வகைகள்

பட்டியலிடப்பட்ட பத்திரங்களை இருவகைப் படுத்தலாம்.

தீர்வுப் பத்திரங்கள் (Cleared securities)

தீர்வடையாப் பத்திரங்கள் (Non - cleared securities)

தீர்வுப் பத்திரங்கள்: இவை முன்னோக்கிய வாணிபத்தில் (Forward Trading) வாங்கி விற்கப்படும் பத்திரங்களாகும். எனவே அவை முன்னோக்கியப் பட்டியல் பத்திரங்கள் எனப்படுகின்றன. தீர்வடையாப் பத்திரங்கள் : அவ்விடத்திய (Spot) பேரங்களில் கையாளப்படுகின்றன. அவை ரொக்கப் பட்டியல் பத்திரங்கள் எனப்படும்.

பத்திரங்களைப் பட்டியலிடுதற்கான செயல்முறைகள் (Procedure for Listing Securities)

தமது பத்திரங்களைப் பட்டியலிட விரும்பும் நிறுமம் குறிப்பிட்ட படிவத்தில் மனு செய்ய வேண்டும். அத்துடன் கீழ்காணும் ஆவணச் சான்றுகளையும் இணைத்து அனுப்ப வேண்டும்

தனது அமைப்பு முறையேடு, செயல்முறை விதிகள், தகவலறிக்கை அல்லது தகவலறிக்கைக்குப் பதில் அறிக்கை, இயக்குநர் அறிக்கைகள், இருப்பு நிலைக் குறிப்புகள், ஒப்புறுதி ஒப்பந்த நகல்கள் போன்றவை.

முதல் அமைப்பு பற்றிய விவரங்கள்

பங்குச் சான்றிதழ், கடனீட்டுப் பத்திரச் சான்றிதழ், ஒதுக்குக் கடிதம் போன்றவற்றின் மாதிரி நகல்கள்

பங்கு விநியோகம் பற்றிய விவரங்களைக் காட்டும் குறிப்பு.

கடந்த 10 ஆண்டுகளில் நிறுமம் வழங்கிய பங்காதாயம், ரொக்க மேலூதியம் பற்றிய விவரங்கள்

கூட்டுருவாக்கம் பெற்றதிலிருந்து தான் செய்த செயல்களைப் பற்றி சுருக்கமான வரலாறு.

ஒரு நிறுமம் செய்த மனுவை ஆராய்ந்தபின் பங்கு மாற்றகத்திற்கு அது நிறைவளிக்கத் தக்கதாக இருப்பின், நிறுமம் பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

நிறுமம் தான் வெளியிட்ட பங்குகளில் குறைந்தது 49 விழுக்காடாவது பொதுமக்களுக்குத் தகவலறிக்கை மூலமாக வெளியிட்டிருக்க வேண்டும்.

நிறுமம் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலை மேற்கொண்டிருத்தல் வேண்டும். மேலும் நிறுமத்தின் முதல் ரூபாய் 25 இலட்சத்துக்குக் குறைவாக இருத்தலாகாது.

பங்கு ஒதுக்கீடு முறையாகவும் நிபந்தனைகள் ஏதுமின்றியும் செய்திருத்தல் வேண்டும்.

பங்கு மாற்றகத்தோடு பட்டியலிடும் உடன்பாடு செய்து கொள்ளல் வேண்டும். அவ்வுடன்பாடு நிறுமத்திற்கும் பங்கு மாற்றகத்திற்கும் உள்ள தொடர்ச்சியான வணிக உறவை நிர்ணயம் செய்யும் தன்மையுடையதாக இருக்கும்.

பட்டியலிடல் உடன்பாடு அந்நிறுமத்தின் மீது சில நிபந்தனைகளை விதிப்பதாக இருக்கும். அந்நிபந்தனைகளை நிறுமம் சிறிதும் வழுவாமல் பின்பற்றுவது அவசியம்.

அ. இயக்குநரவை கூடிப் பங்காதாயம் பற்றி முடிவு செய்யப்படும் தேதியைப் பங்கு மாற்றகத்திற்குத் தெரிவித்தல்.

ஆ. தனது தொழிலின் தன்மை, அவற்றில் ஏற்படும் மாற்றங்களைத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

இ. தணிக்கை செய்த தனது ஆண்டுக் கணக்கின் நகல்களைப் பங்கு மாற்றகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஈ. நிறுமத்தின் முதலீட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பங்கு மாற்றகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

உ. வெளியிடும் புதிய மற்றும் மேலூதியப் பங்குகள் பற்றிய விவரம் பங்கு மாற்றிகத்திற்குத் தெரியப்படுத்தப் பட வேண்டும்.

ஊ. பட்டியலிடப்படும் பத்திரங்களை இரத்து அல்லது மீட்பு செய்வதைப் பற்றிய நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட வேண்டும்.

எ. பட்டியலிடுதலுக்குரிய நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப் பட்டிருக்கிறது எனவும், அவற்றை என்றும் மீறுவதில்லை எனவும் உறுதி கூற வேண்டும்.

நிறுமம் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற உறுதிமொழியைத் தர வேண்டும்.

பங்கு மாற்றகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் அறிவிக்க வேண்டும்.

இந்நிபந்தனைகளைப் பின்பற்றினால், நிறுமத்தின் பத்திரங்கள் பங்கு மாற்றகத்தின் அலுவல் பட்டியலில் சேர்க்கப்படும்.

பங்கு மாற்றகத்தின் வாணிகச் செயல்பாடுகள் (Procedure for trading)

பங்கு மாற்றகத்தில் பங்குகளை வாங்க, விற்க பின்வரும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

தரகரைத் தேர்ந்தெடுத்தல் (Selection of Broker)

உறுப்பினரல்லாத எவரும் பங்கு மாற்றகத்தின் தளத்தில் (Floor) தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பங்கு மாற்றகத்தின் உறுப்பினராக உள்ள தரகர்கள் மூலமாகத்தான் பங்குகளை வாங்க, விற்க முடியும். முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட தரகரை தானாகவோ அல்லது நண்பர்களின் பரிந்துரையின் பேரிலோ, தேர்வு செய்யலாம்.

அளிப்பாணை வழங்குதல் (Placing an Order)

பங்குகளை வாங்க விற்க உத்திரவிடுவதற்கு முன் அவைகளைப் பற்றி நண்பர்களிடமோ மற்ற தரகர்களிடமோ கலந்து ஆலோசிக்கலாம். பின்னர் பத்திரங்கள் வாங்க, விற்பதற்கான உத்தரவை நேரிலோ, தந்தி, தொலைபேசி வழியாகவோ அனுப்பலாம்.

பின்வரும் ஏதாவதொரு முறையில் பத்திரங்களை வாங்க, விற்க வாடிக்கையாளர் தரகருக்கு உத்தரவிடலாம்.

அ) நிருணயித்த விலை ஆணை (Fiexd market price order)

இதன்படி வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட விலையில் பத்திரங்களை வாங்க அல்லது விற்க உத்தரவிடுகிறார். இவ்விலைக்குக் கட்டுப்பட்டு பத்திரங்களைச் சாதகமான விலைக்கு வாங்குவதோ விற்பதோ அத்தரகரின் கடமையாகும்.

ஆ) சந்தை அல்லது சிறந்த விலை ஆணை (Market or at best price order)

இவ்வாணையின்படி சந்தையில் நிலவும் சிறந்த விலைக்குக் குறிப்பிட்ட பத்திரங்களை உடனடியாக வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும்.

இ) திறப்பாணை (Open order)

தமது ஆணையை எந்தக் கால வரம்புக்குள் செயல்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர் குறிப்பிடாத நிலையில் அது திறப்பாணை ஆகிறது.

ஈ) உடனடி அல்லது இரத்து ஆணை (Immediate or cancel order)

வாடிக்கையாளரின் இவ்வாணையின்படி தரகர் உடனடியாகக் குறிப்பிட்ட பத்திரங்களைக் குறிப்பிட்ட விலைக்கோ அதற்கும் உயர்வான விலைக்கோ விற்க வேண்டும் அல்லது அவ்வாணை ரத்தாகியதுபோல் வாளாவிருக்க வேண்டும்.

உ) இழப்பை நிறுத்தும் ஆணை (Stop - loss order)

பத்திர விலைகள் கடுமையான ஏற்றிறக்கங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் ஒருவர் தாம் முன்னர் விற்க அல்லது வாங்க ஒப்புக்கொண்ட பத்திரங்கள் மீது எழக்கூடிய இழப்பை ஒரு வரம்புக்குள் நிறுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற ஆணையை தம் தரகருக்குத் தருவது வழக்கம். எடுத்துக்காட்டாக, ஒருவர் ஒரு பங்கை ரூ.100க்கு வாங்கியுள்ளார். அப்பத்திரத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. அவற்றின் மீது எழக்கூடிய இழப்பை ரூ.5க்கு மேற்படாதவாறு நிறுத்த விரும்பினால் அவர் தமது தரகரை 95க்கு விற்க நிறுத்துக எனப் பணிப்பார்.

உசித ஆணை (Discretionary order)

வாடிக்கையாளர்களுக்குத் தமது தரகர் பேரில் அசைவிலா நம்பிக்கை இருக்கும் நிலையில் விலையோ அல்லது விலை வரம்போ குறிப்பிடப்படாமல், தரகரது உசிதம்போல எந்த விலை நியாயமானது என அவர் நினைக்கிறாரோ அவ்விலைக்கு வாங்க அல்லது விற்க அவருக்கு அதிகார நெகிழ்வு மிகவும் அதிகமாகத் தருவது உசித ஆணையாகும்

ஆணையைச் செயலாக்குதல் (Executing the order)

வாடிக்கையாளரிடமிருந்து ஆணை பெறப்பட்டவுடன் அதைத் தரகர் தன்னுடைய தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் (கையேட்டில்) பென்சிலால் குறித்துக்கொண்டு ஆணைப் புத்தகத்தில் எடுத்து எழுதுவர். அதே பத்திரங்களில் நாட்டங் கொண்டுள்ள பிற தரகர்களுடன் கலந்தாராய்ந்து பேரம் பேசி, தன்னுடைய வாடிக்கையரின் ஆணையைச் செயல்படுத்துவர். பேரம் முடிவடைந்த பின் தரகரும் எந்த பிற தரகருடன் பேரம் முடிந்ததோ அவரும் தம்முடைய தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் சுருக்கமான முறையில் பத்திரங்களுக்குப் படிந்த விலை பற்றி எழுதிக் கொள்வர். பிற தரகருடன் ஏற்ற ஒப்பந்தத்தின் நகலை (பிரதி) வாடிக்கையருக்கு அனுப்பி வைப்பர்.

தீர்வு (Settlement)

பங்கு மாற்றகத்தின் வாணிகத் தீர்வுகள் பங்குகள் வாங்கி விற்பதற்கான ஒப்பந்தங்களைப் பொருத்து அமையும். ஒப்பந்தங்கள் இருவகைப்படும்.

1) ஆயத்தக் கொடுப்பு ஒப்பந்தங்கள்,

2) முன்னோக்கிய ஒப்பந்தங்கள்.

ஆயத்தக் கொடுப்பு ஒப்பந்தங்களைத் தீர்த்தல். இவ்வகை ஒப்பந்தங்களில் பத்திரங்களை வாங்கியவர் பணத்தையும் விற்றவர் பத்திரங்களையும் உண்மையாகவே பரிமாறிக் கொள்வர். இவ்வொப்பந்தங்கள் தாம் செய்யப்படும் அதே நாளிலோ அல்லது பங்கு மாற்றிகம் குறிப்பிடும் மிகக் குறுகிய காலத்திலோ தீர்க்கப்படும். இவற்றை அவ்விடத்திய பேரங்கள் (Spot Contract) என்பர்.

முன்னோக்கிய கொடுப்பு ஒப்பந்தங்களைத் தீர்த்தல். இவ்வகை ஒப்பந்தங்கள், நடைமுறையில் பத்திரங்களை உண்மையாகவே வாங்குவதற்கோ, விற்பதற்கோ செய்யப்படாமல், விலை வேறுபாட்டால் இலாபம் பெறும் நோக்கத்தோடுதான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இவ்வகை ஒப்பந்தங்களின் தீர்வு பங்கு மாற்றகத்தால் குறிக்கப்படும் நாளில் ஏற்படலாம்.

பங்கு மாற்றகத்தின் நன்மைகள்

பங்கு மாற்றகம் முதலீட்டாளர்களுக்கும் நிறுமங்களுக்கும் மதிப்பிட முடியாத நன்மைகளைத் தருகிறது. எந்நிறுமத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டு பங்கு மாற்றகத்தில் விற்பனை செய்யப்படுகின்றதோ, அந்நிறுமங்கள் கடன் சந்தைகளில் முதலீட்டாளர்களின் நன்மதிப்பைப் பெறுகின்றது. பங்கு மாற்றகங்கள் இந்நிறுமங்களின் மேலாண்மை மீது சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

நிறுமத்திற்கு நன்மைகள்

பங்கு மாற்றகத்தில் கையாளப்படும் பங்குகளைக் கொண்டுள்ள நிறுமத்தின் மதிப்பு மூலதனச் சந்தையில் உயரும். நிறுமம் வலுவானது என்ற எண்ணம் உருவாகும்.

ஒரு நிறுமத்தின் பத்திரங்களுக்கான சந்தையை விரிவடையச் செய்கின்றது. அதாவது நிறுமங்களின் பங்குகளுக்குப் பரந்த அளவிலான சந்தை கிடைக்கிறது.

பங்கு மாற்றகத்தில், பங்குகள் விற்க மற்றும் வாங்கப்படுவதால், நிறுமத்தின் வருவாய், பங்காதாயம் மற்றும் சொத்து மதிப்புகளோடு ஒப்பிடுகையில் நிறுமத்தின் பங்குகளின் மதிப்பு கூடுகின்றது. இது நிறுமம் வேறொரு நிறுமத்தோடு இணைக்கப்படும்பொழுது சாதகமான பேரத்தைப் பெற உதவி செய்கிறது.

பங்கு மாற்றகம் தருகின்ற மறைமுகமான உதவிகளால் புதிய நிறுமங்கள் மூலதனச் சந்தையில் எளிதாகத் தனக்குத் தேவையான முதலீட்டினைப் பெற முடிகிறது.

ஊக வணிகர்களின் செயல்பாட்டினால் பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் விலைகளில் அடிக்கடி ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைகின்றன.

முதலீட்டாளருக்கு நன்மைகள்

பங்கு மாற்றங்கள் முதலீட்டாளர்களின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் பாதுகாக்கின்றன. முதலீட்டாளர்கள் தமது விருப்பம்போல் பத்திரங்களை உடனடியாக வாங்கவும் விற்கவும் ஏற்ற ஆயத்தச் சந்தையாகவும் இடையறாச் சந்தையாகவும் இவை விளங்குகின்றன. தரகர்களால் அவர்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள்.

பத்திரங்களுக்கான நிலையான சந்தையையும் முதலீடுகளுக்கான நீர்மைத் தன்மையையும் அளிக்கின்றது.

பங்கு மாற்றகத்தில் வாணிகம் செய்யப்படுகின்ற பத்திரங்கள் கடன்களுக்கு நல்ல பிணையங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நிறுமங்களின் பத்திர மதிப்புகளை, விலைப்புள்ளிகளாகப் பங்கு மாற்றங்கள் தினசரியாகவோ அல்லது பருவகால முறையிலோ வெளியிடுவதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள முடிகிறது.

நல்ல நிதி நிலைமையுடைய நிறுமங்களின் பங்குகள்தான் பெரும்பாலும் பங்கு மாற்றகத்தில் வாணிகம் செய்யப்படுகின்றன. அதனால் முதலீட்டாளர்கள் நிதி நிலைமை சீரழிந்த நிறுமங்களில் முதலீடு செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

சமுதாயத்திற்கு ஆற்றும் சேவைகள்

பங்கு மாற்றகங்கள் முதலீட்டாளர்களின் சேமிப்பை நிறுமங்களின் பத்திரங்களில் முதலீடு செய்விப்பதின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. பெருமளவு மூலதன உருவாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. பத்திரங்களின் விற்பனையை ஊக்கப்படுத்தி, (விரிவடையச் செய்து) சிறப்பாக மேலாண்மை செய்யப்படும் நிறுமங்களின் நிலைமையை உயர்த்துகின்றன.

நன்கு நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் சுலபமாக நிதி வளங்களைப் பெறுவதற்குப் பங்கு மாற்றகங்கள் உதவுகின்றன.

அரசுக்குத் தேவையான நிதியை மக்களிடம் கடனாகப் பெறுவதற்கும், நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சித் திட்டங்களை அரசு நிறைவேற்றுவதற்கும் உதவுகின்றன.

கிடைத்தற்கரிய நிதி வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தப் பங்கு மாற்றாகங்கள் உதவுகின்றன.

நாட்டின் தொழில் நிலையை அளவிடும் கருவியாகப் பங்கு மாற்றகங்கள் செயல்படுகின்றன.

பல்வேறு பத்திரங்களின் விலை ஏற்ற இறக்கங்களின் மூலமாக நாட்டின் பொருளாதாரப் போக்கினை அவைகள் பிரதிபலிக்கின்றன.

பங்கு மாற்றாகங்களின் குறைபாடுகள்

பங்கு மாற்றங்களின் முக்கிய குறைபாடுகளாவன:

அமைப்பு முறைகளில் சீரான தன்மையும், கட்டுப்பாடும் இல்லாதது முக்கிய குறைபாடாகும். பங்கு மாற்றாகங்களில் உறுப்பினர்களாவதற்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.

இந்தியாவில் எந்த ஒரு பங்கு மாற்றகமும் உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை வரையறுக்கவில்லை.

பல நேரங்களில் பங்கு மாற்றகங்கள் விரும்பத்தகாத ஆரோக்கியமற்ற ஊக வாணிகத்தைக் கட்டுப்படுத்த தவறியிருக்கிறது.

பங்கு மாற்றகங்களில் பங்குகள் பட்டியலிடப்படுவதற்குச் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

விளைபொருள் மாற்றகங்களில் (Commodity Exchanges) இருப்பது போன்று பக்க விலக்கு அளி அல்லது மிகை அளவு (Margin requirement) ஏதுமில்லை .

சில நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்கு மாற்றாகங்கள் செயல்படுகின்றன.

முதலீட்டாளர்களும் ஊக வணிகர்களும்

தன்னுடைய உறுப்பினர்களுக்கு வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் வாணிகம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, நடவடிக்கைகளின் தீர்வுகளை முடித்து வைப்பது இவையே பங்கு மாற்றகத்தின் முக்கிய பணியாகும். பத்திரங்களை வாங்குவோர் மற்றும் விற்போரை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பை இலாபகரமான, வருவாயை ஈட்டித் தரும் பத்திரங்களில் முதலீடு செய்வதற்காகப் பத்திரங்களை வாங்குகின்றனர். பொதுவாக இவர்கள்தாம் வாங்கிய பத்திரங்களை நீண்டகாலம் வரை வைத்திருப்பவர்கள். இவர்கள் இலாபத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்கள் உண்மையான முதலீட்டாளர்கள் என்றும் அழைக்கப்படுவர்.

ஊக வணிகர்கள்

எதிர்காலத்தில் இலாபத்துடன் விற்கும் நோக்குடன் பத்திரங்களைத் தற்போது வாங்குபவர்களை ஊக வணிகர்கள் என்று அழைக்கிறோம். இவர்கள் தாம் வாங்கிய பத்திரங்களை நீண்ட காலம் வரை வைத்திருக்க மாட்டார்கள். பத்திரங்களை வாங்கும்போதே அவற்றை விற்கும் எண்ணத்தில்தான் வாங்குகின்றனரே தவிர அவற்றைத் தங்களிடம் வைத்திருக்கும் எண்ணத்திலில்லை. இவர்கள் விலையேற்ற இறக்கத்தில்தான் விருப்பம் உள்ளவர்கள். இவர்கள் உண்மையான முதலீட்டாளர்களல்லர்.

ஊக வணிகர்களின் வகைகள் (Types of speculator)

இந்தியாவில் பங்கு மாற்றகங்களில் நான்கு வகையான ஊக வணிகர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் காளை, கரடி, கலைமான், முட வாத்து என்று அழைக்கப்படுகின்றனர். ஊக வணிகர்கள், அவர்களுடைய செயல்களைக் கொண்டு மிருகங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவருக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள பெயர் மிருகத்தின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

காளை (Bull)

பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது (Tejiwala) தெஜ்வாலா என்றழைக்கப்படுகிறார். இவர் எதிர்காலத்தில் அதிக விலையில் பத்திரங்களை விற்க இயலும் என்ற எண்ணத்தில் தற்போது பத்திரங்களை வாங்க முனைகிறார். ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி எறிவது போன்று, இந்த வகை ஊகவணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார். இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும்(Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.

கரடி(Bear)

கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊக வணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர். அப்பங்குகளைத் தற்போது விற்று பின்னர் அவைகளைக் குறைந்த விலையில் வாங்கும் எண்ணத்தில் செயல்படுவார். இவ்வகை ஊக வணிகர், பங்குகளைப் பின்னர் குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற எண்ணத்தில் தான் கொண்டிராத பங்குகளைத் தற்போது அதிக விலையில் விற்பனை செய்வார். ஒரு கரடி, பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல ஒரு கரடி ஊகவணிகரும், பங்குச் சந்தையில் பங்குகளின் விலையைக் கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ஒரு கரடி ஊக வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு (Pessimism) கொண்டவர்.

கலைமான் (Stag)

கலை மான் ஊக வணிகர் முன்னெச்சரிக்கை உடையவர். இவர் ஒரு நிறுமத்தின் பங்குகள் முனைமத்தில் (At premium) விற்கப்படும் என்று அறிந்தவுடன், புதிய விடுப்புகளில் பங்கு கோரி விண்ணப்பம் செய்வார். தனக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டால் அவற்றை முனைமம் பெற்றுக்கொண்டு விற்று விடுவார். எந்த நிறுமங்களின் பங்கு வெளியீடு பொதுமக்களால் விரும்பப்படுகிறது, முனைமத்துடன் விற்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து அந்நிறுமங்களை தேர்வு செய்வார். ஒதுக்கீட்டுப் பணம் (Allotment money) கட்ட அழைப்பு வருமுன்னரே பங்குகளை இவ்வகை ஊக வணிகர் விற்றுவிடுவார். இவர் 'முனைம வேட்டையாளர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

முட வாத்து (Lame Duck)

தற்போதைய, தம் நடவடிக்கைகளில் உள்ள இடர்ப்பாடுகளைத் தீர்ப்பதில் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு கரடி ஊக வணிகரே முட வாத்து என்று அழைக்கப்படுகிறார். கரடி ஊக வணிகர் பின்னர் கொடுப்பதற்காகத் (Delivery) தற்போது பத்திரங்களை விற்பார். ஆனால் குறிப்பிட்ட நாளில் பங்குகளை வைத்துள்ள எவரும் அதை விற்க விரும்பாததால் எந்த விலையிலும் வாங்குவதற்கு எந்த ஒரு பங்கும் கிடைக்காமல் மூலையில் முடக்கப்பட்ட (Cornered) நிலையில் இருப்பார். மேலும் பங்குகளை இவரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவரும் ஒப்பந்தத்தின் தீர்வைத் தள்ளி வைக்க விரும்பாததால் இவ்வகை ஊக வணிகர் போராட வேண்டியதாகிறது.

பங்கு மாற்றகத்தில் செயல்படுவோர்

1) பங்கு மாற்றத்தின் உறுப்பினர்கள்.

அ) தன் வணிகர்கள் (Jobber)

இவ் வணிகர்கள், பங்குத் தொகுதிகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றை வாங்கி விற்கும் தனிப்பட்ட வியாபாரிகள் ஆவர். இவர்கள் தமக்காகப் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவர். வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வேறுபாடே இவர்கட்கு கிடைக்கும் ஆதாயமாகும். இவ் வணிகர்கள் நேரடியாக உறுப்பினரல்லாதவர்களுடன் வியாபாரம் செய்ய முடியாது. இவர்கள் எந்தக் கழிவும் பெற இயலாது. இந்தியாவில் இவர்கள் தாராவணிவாலா (Tarawaniwala) என்றழைக்கப்படுகிறார்கள்.

ஆ) தரகர்கள் (Brokers)

தரகர்கள், கழிவு முகவர் ஆவர். பத்திரங்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே இடைநிலையாளர்களாகத் தரகர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் தனக்காகப் பத்திரங்களை வாங்கி விற்பதில்லை. தரகர்கள் பத்திரங்களை வாங்குபவர்களையும் விற்பனை செய்கின்ற தன்வணிகர்களையும் ஒன்றாக இணைத்து பேரம் முடிவடைய உதவுகின்றனர். இவ்வுதவிக்காக இருதரப்பினரிடமிருந்தும் கழிவு (Commission) பெறுவர். தரகர்கள் பத்திரங்களின் விலைப் போக்கினை (trend) மதிப்பிடுவதில் வல்லுநர்களாக இருப்பர். தங்களுடைய வாடிக்கையாளர் ஆதாயம் பெறுவதற்கு அறிவுரையளிப்பர். பொதுமக்களிடமிருந்து முதலீடு செய்வதற்கான ஆணையைப் பெற்றுத் தன்வணிகர்கள் மூலமாக அவற்றைச் செயல்படுத்துவர். அதற்காக குறிப்பிட்ட கழிவினைப் பெறுவர்.

உறுப்பினர்களுக்காக செயல்படும் உறுப்பினரல்லாதவர்

வசதி கருதி வரையறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுள்ள உறுப்பினரல்லாத மற்ற சிலரும் பங்கு மாற்றக வீட்டிற்குள் (House) நுழைந்து உறுப்பினர்கள் சார்பாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர். அத்தகைய முகவர்கள் இரு வகையைச் சேர்ந்தவர்கள்.

அ) துணைத் தரகர் (Remisier)

இவர் பங்கு மாற்றகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு முகவராகச் செயல்படுவார். தன்னை அமர்த்திய முதல்வருக்கு (principal) அதாவது உறுப்பினருக்கு வியாபாரத்தைப் பெற்றுத் தந்து அதற்காகக் கழிவு பெறுவார்.

ஆ) அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் (Authorised clerk)

இவர் பங்கு மாற்றகத்தின் உறுப்பினராக இருப்பவரால் தனக்குப் பணியாளராக அமர்த்தப்பட்டவராவார். இவர்கள் தங்களுடைய பணியாண்மையரின் (employer) சார்பாகப் பங்கு மாற்றகத்தின் தளத்தில் (Floor) தொழில் செய்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பளமும் கழிவும் பெறுவர்.

ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்