ஜவுளித் துறை மேம்பாட்டிற்கானத் திட்டங்கள், முதலீடுகள் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆயத்த ஆடை பூங்கா (பிஎம் மித்ரா) திட்டம், இத்துறையில் முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் உள்ள ஏழு மாநிலங்களில், உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சியாகும். இத்திட்டம் 2021-22 முதல் 2027-28 வரையிலான காலகட்டத்தில், ரூ. 4,445 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மையங்கள், பண்ணை முதல் இழை வரை, தொழிற்சாலை முதல் நவநாகரீக ஆடைகள், வெளிநாடு வரை என்ற ஐந்து அம்சத் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேலும், இவை நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், நூல் நூற்பு முதல் ஆடை தயாரிப்பு வரையிலான, முழுமையான செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு மாநிலங்களில் இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலை அமைப்பதற்கான இடங்கள், பிளக்-அண்ட்-பிளே எனப்படும் உடனடி பயன்பாட்டிற்கான வசதிகள், இன்குபேஷன் மையங்கள், சாலைகள், மின்சாரம், நீர், கழிவுநீர் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளையும், பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிலாளர் விடுதிகள், குடியிருப்புகள், சரக்குப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள், கிடங்குகள், மருத்துவ வசதிகள், பயிற்சி, திறன் மேம்பாட்டு வசதிகள் உள்ளிட்ட துணை உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. தற்போது, அனைத்து மாநிலங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன், 100% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஜவுளிப் பூங்காக் கட்டுமானப் பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297507®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்