தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் உலகின் மிகப்பெரிய வாழ்வாதார முயற்சிகளில் ஒன்றாகும். இது கிராமப்புற ஏழைக் குடும்பங்களை, குறிப்பாகப் பெண்களை, சுய உதவிக் குழுக்களாக திரட்டுகிறது. அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரம், நிதிச் சேவைகளுக்கான அணுகல், திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஜூன் 2026 நிலவரப்படி, தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10.29 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்கள் சுய உதவிக் குழுக்களாகத் திரட்டப்பட்டுள்ளன. புத்தொழில் கிராம தொழில்முனைவுத் திட்டம் இந்தியா, உலகில் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலமைப்பைக் கொண்டுள்ளது. சாதகமான அரசுக் கொள்கைகளின் ஆதரவுடன் இது செழித்து வளர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், பெரும்பாலான இந்திய புத்தொழில் சூழலமைப்புகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. எனவே, கிராமப்புறங்களில் தொழில்முனைவையும் புத்தாக்கத்தையும் ஊக்குவிப்பதற்காக அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. புத்தொழில் கிராம தொழில்முனைவுத் திட்டம் (Start-up Village Entrepreneurship Programme) என்பது அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். 2016-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு துணைத் திட்டமாகும். இத்திட்டம், விவசாயம் அல்லாத துறையில் சிறு தொழில்களை நிறுவுவதில் சுய உதவிக் குழுக்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவளிக்கிறது. ஜூன் 30, 2026 வரை, இத்திட்டம் நாடு முழுவதும் 4.32 லட்சம் கிராமப்புற நிறுவனங்களுக்கு ஆதரவளித்திருந்தது. இத்திட்டம் சமூக உள்ளடக்கத்திலும், தொழில்முனைவோர் வாய்ப்புகளுக்கான சமமான அணுகலிலும் வலுவாக கவனம் செலுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டதில், அசாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகள் தொழில்முனைவோரில் சுமார் 86% பேர் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சுய உதவிக் குழுக்கள், பிரதமரின் முத்ரா திட்டம் போன்ற திட்டங்களுடன் ஒன்றிணைவதன் மூலம், இத்திட்டம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. வறுமைக் குறைப்பு, உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒரு திறமையான அடித்தள மாதிரியாக புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டம் உருவெடுத்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி, நிறுவன ஆதரவு, வணிக மேலாண்மைப் பயிற்சி, மென்திறன் மேம்பாடு, வணிக மேம்பாட்டுச் சேவைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதாரங்களையும் சுய வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டம், வங்கி இணைப்பை எளிதாக்குகிறது. நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியையும் பரந்த சமூகப் பலன்களையும் அடைவதே இதன் நோக்கமாக இருந்து வருகிறது. உள்ளூரில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் சமூக அடிப்படையிலான முடிவெடுத்தல் என்பது புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டமானது, பெண்கள், விளிம்புநிலை சமூகங்கள், குறைந்த கல்வித் தகுதி கொண்ட தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதில் வலுவான கவனம் செலுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளது. வலுவான சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் கிராமப்புற தொழில்முனைவு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாகச் செயல்பட முடியும் என்பதை புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டம் நிரூபித்துள்ளது. இது தற்சார்பு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிக்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289268®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்