இணையதள நிதி மோசடிகளை தடுக்க உதவி எண் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான டிஜிட்டல் பணம் செலுத்தும் அமைப்பை வழங்குவதற்கு புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இணையதள மோசடிகளால் நிதி இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் 1930 (முன் 155260) என்ற தேசிய அளவிலான உதவி எண்ணையும் புகார் தெரிவிப்பதற்கான தளத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இணையதள மோசடிகளால் ஏமாற்றப்பட்ட நபர்களுக்கு புகார்களை தெரிவிக்கவும், தாங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழப்பதைத் தடுக்கவும் ஒரு வழிமுறையை தேசிய உதவி எண் மற்றும் புகார் தெரிவிக்கும் தளம் வழங்குகிறது. இந்த சேவை தில்லி, ராஜஸ்தான், உத்தராகண்ட், சத்தீஷ்கர், உத்தரப்பிரதேசம், அசாம் மற்றும் தமிழ்நாட்டில் 24 x 7 செயல்படும். பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். செயல்படும் முறை உதவி எண் மற்றும் அது தொடர்பான தளம் கீழ்காணும் முறைகளில் செயல்படுகிறது: இணையதள மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம். குறிப்பிட்ட மாநில காவல் துறையினர் கையாண்டு செயல்படுத்துகின்றனர். காவல் துறையில் பணியாற்றுபவர்கள் மோசடி பரிவர்த்தனை விவரங்களையும் அழைத்தவர்களின் அடிப்படை தகவல்களையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதனை குடிமக்கள் நிதி இணையதள மோசடிகள் குறித்த புகார் தெரிவிக்கும் மற்றும் மேலாண்மை அமைப்பில் டிக்கெட்டுகள் வடிவில் சமர்ப்பிப்பார்கள். இந்த டிக்கெட்டானது குறிப்பிட்ட வங்கிகள், வாலட்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு செல்லும். பாதிக்கப்பட்டவரின் வங்கி அல்லது மோசடி செய்யப்பட்ட பணம் சென்ற வங்கி அல்லது வாலெட் என்ற அடிப்படையில் தகவல் சென்றடையும். பாதிக்கப்பட்ட நபருக்கு புகார் பதிவுக்கான ஒப்புகை எண்ணுடன் குறுஞ்செய்தி சென்றடையும். அதில், மோசடி குறித்த முழுமையான தகவல்களை தேசிய இணையதள குற்றங்களை தெரிவிக்கும் வலைதளத்தில் (www.cybercrime.gov.in) 24 மணி நேரத்துக்குள், ஒப்புகை எண்ணை வைத்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும். குறிப்பிட்ட வங்கியும் கூட புகார் தெரிவிக்கும் தளத்தில் உள்ள டிக்கெட்டைப் பார்க்க முடியும். இதையடுத்து தனது கட்டமைப்பில் உள்ள தகவல்களை சரி பார்க்கும். ஆதாரம்: நியூ இந்தியா சமாச்சார்