பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள 10.4 கோடி பழங்குடியின மக்களில் பலர், சிறு வனப் பொருட்கள் விற்பனை மூலம் தங்களது ஆண்டு வருமானத்தில் 20 முதல் 40 சதவீதம் வரை பெறுகின்றனர். தேன், புளி, மூங்கில், இலந்தை, மகுவா மலர்கள், மருத்துவ மூலிகைகள், அரக்கு போன்ற பொருட்கள் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. ஆனால், இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு இவற்றை விற்பதால், தங்களது உழைப்புக்கான உரிய வருமானம் கிடைக்காமல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையை மாற்றுவதற்காக, 2021-22-ம் ஆண்டு பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் (Pradhan Mantri Janjatiya Vikas Mission) தொடங்கப்பட்டது. இதன் மூலம் பழங்குடியினர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, வன்தன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படுகின்றன. மூலப் பொருட்களை மட்டும் விற்பவர்களாக இல்லாமல், அவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் முனைவோராக அவர்கள் உருவாக்கப்படுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை 2006-ம் ஆண்டின் வன உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கு வனப் பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்யும் உரிமையை வழங்குகிறது. 1996-ம் ஆண்டின் சட்டமும், பழங்குடியினருக்கு சிறு வனப் பொருட்களின் உரிமையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 87 வகையான சிறு வனப் பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பான டிரைஃபெட் [Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED)], நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இப்பொருட்களைக் கொள்முதல் செய்கிறது. 2013-14 முதல் மாநில அரசுகள், 2,67,954 மெட்ரிக் டன் வனப் பொருட்களை ₹693.98 கோடிக்கு வாங்கியுள்ளன. பயிற்சி, நிதி, சந்தை வாய்ப்புகள் 15 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 300 பழங்குடியினர் இணைந்து ஒரு வன்தன் மேம்பாட்டு மையத்தை உருவாக்குகின்றனர். இதில் குறைந்தது 60 சதவீதத்தினர் பழங்குடியினராக இருக்க வேண்டும். பொருட்களைப் பதப்படுத்தும் கருவிகள், உலர்த்தும் வசதி, பேக்கிங் செய்யும் கருவிகள், சேமிப்பு, போக்குவரத்து உதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. நிலையான முறையில் பொருட்களைச் சேகரித்தல், மதிப்புக் கூட்டுதல் தொடர்பாக 30 உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை மூலம் தொழில் மூலதனமும் கிடைக்க உதவி செய்யப்படுகிறது. பழங்குடியினர் வாரச் சந்தைகள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த மையங்கள் உருவாக்கப்படுகின்றன. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகள் படிப்படியாக மேம்படுத்தப்படுகின்றன. கண்காட்சிகள், இணையவழி விற்பனைத் தளங்கள், விளம்பரங்கள் ஆகியவை மூலம் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் உதவி செய்யப்படுகிறது. பெண்களுக்கு வருமான வாய்ப்பு 2026 ஜூலை 31 நிலவரப்படி, 4,172 மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2,911 மையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் விற்பனை ₹168 கோடியை எட்டியுள்ளது. மொத்தம் 12.48 லட்சம் பழங்குடியினர் இம்மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அருணாசலப் பிரதேசத்தின் லெபராடா மாவட்டத்தில் உள்ள ஒரு வன்தன் மையத்தில் 300 பெண்கள் சுயஉதவிக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஊறுகாய், மஞ்சள் தூள், இஞ்சித் தூள், அன்னாசிப் பழ ஜாம், பழச்சாறு வகைகள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர். 2022-23 முதல் ₹11 லட்சம் மதிப்பிலான பொருட்களை இவர்கள் விற்றுள்ளனர். இதனால் பெண்களுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பதுடன், தொழிலிலும் உரிமைப் பங்கு கிடைக்கிறது. பழங்குடியினர் பெருமை தினம் பழங்குடியினர் பெருமை தினத்தையொட்டி இருவார விழா 2026 நவம்பர் 1 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் (Dharti Aaba Bhagwan Birsa Munda) பிறந்த நாளான நவம்பர் 15, 2021 முதல் பழங்குடியினர் பெருமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2026) இந்த நாளில், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான 228 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. 74 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இரண்டு தேசிய இணையவழித் தளங்களும் தொடங்கப்பட உள்ளன. 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 160-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பழங்குடியினரின் பாரம்பரிய அறிவையும், வன வளங்களையும் அடிப்படையாகக் கொண்ட வன் தன் திட்டம், அவர்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், சமூக உரிமையுடன் கூடிய நிலையான வனப் பொருளாதாரத்தை உருவாக்குகிறது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கிற்கும் இது வலுச் சேர்க்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336172®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்